மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றதால் தகராறு; ஒருவர் படுகாயம் 7 பேர் கைது


மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றதால் தகராறு; ஒருவர் படுகாயம் 7 பேர் கைது
x
தினத்தந்தி 24 Aug 2018 4:52 AM IST (Updated: 24 Aug 2018 4:52 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊத்துக்கோட்டை,

ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரவீன்(வயது 22), சுரேஷ்(20). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கிராம எல்லையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சாலை ஓரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த தங்கராஜ்(24), தினேஷ்(22), அஜித் (22), செல்வக்குமார்(33), செந்தில்குமார் (33), சதீஷ் (26) உள்பட 7 பேர் ஏன் மோட்டார்சைக்கிளில் இப்படி வேகமாக செல்கிறீர்கள்? என இவர்களை கண்டித்தனர்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பிரவீன், சுரேஷ் இருவரும் சேர்ந்து 7 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த 7 பேரும் பிரவீன், சுரேஷ் ஆகியோரை தாக்க முயன்றனர்.

அப்போது அந்த வழியாக சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த அருள்(60) என்பவர் மோதலில் ஈடுபட்ட வாலிபர்களை தடுத்தார். இதில் அவர் மீது தாக்குதல் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

இது குறித்து அருள் அளித்த புகாரின்பேரில் பென்னாலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக தங்கராஜ், தினேஷ், அஜித், செல்வக்குமார், செந்தில்குமார், சதீஷ் உள்பட 7 பேரை கைது செய்தனர்.

பின்னர் கைதான 7 பேரையும் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Next Story