மோட்டார் சைக்கிள்-வாகனம் மோதல்; 2 நண்பர்கள் பலி
குள்ளஞ்சாவடி அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதிய விபத்தில் 2 நண்பர்கள் பலியானார்கள்.
குறிஞ்சிப்பாடி,
குள்ளஞ்சாவடி அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் விஜயகுமார்(வயது 22). இவரும், அதே ஊரை சேர்ந்த சேட்டு மகன் அருள்முருகன்(23) என்பவரும் நண்பர்கள். பி.ஏ. பட்டதாரியான இருவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சொந்த வேலை காரணமாக குள்ளஞ்சாவடிக்கு வந்தனர். அங்கு வேலை முடிந்ததும் நள்ளிரவு 12.30 மணி அளவில் அதே மோட்டார் சைக்கிளில் கிழக்கு ராமாபுரத்துக்கு புறப்பட்டனர்.
கடலூர்-விருத்தாசலம் சாலையில் கருமாட்சிபாளையம் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. வாகனம் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளுடன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அருள்முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். தலையில் பலத்த காயமடைந்த விஜயகுமார், உயிருக்காக போராடிக்கொண்டிருந்தார்.
உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்களும், அந்த வழியாக சாலையில் வந்தவர்களும் விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையில் விபத்து பற்றி தகவல் அறிந்ததும் குள்ளஞ்சாவடி போலீசார் விரைந்து வந்து அருள்முருகனின் உடலை கைப்பற்றினர்.
இதையடுத்து 2 பேரது உடலும் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் பலியான 2 பேரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இது குறித்து கண்ணன் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது?, அதில் வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story