வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு இணையவழி விரைவு குறியீடு


வன்கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு இணையவழி விரைவு குறியீடு
x
தினத்தந்தி 24 Aug 2018 3:30 AM IST (Updated: 24 Aug 2018 5:42 AM IST)
t-max-icont-min-icon

பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வு இணையவழி விரைவு குறியீடு மற்றும் குறும்படத்தை கலெக்டர் கந்தசாமி வெளியிட்டார்.

திருவண்ணாமலை,


திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன் சார்பாக நேற்று பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்த ‘மெய் தீண்டாய்’ என்ற விழிப்புணர்வு இணைய வழி விரைவு குறியீடு மற்றும் ‘கோமல்’ விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு விழா நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்சாமி தலைமை தாங்கி, விழிப்புணர்வு இணைய வழி விரைவு குறியீடு மற்றும் குறும்படத்தை வெளியிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:-

பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்கள் குறித்த பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கடந்த ஆண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் தபால் அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு மாணவிகளிடம் ‘நல்ல தொடுதல், தவறான தொடுதல்’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் மெய் தீண்டாய் என்ற தலைப்பில் இணைய வழி விரைவு குறியீடு முதல்முறையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் அட்டை மற்றும் ஸ்டிக்கர் வழங்கப்படுகிறது. இதில் நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன் மூலம் ‘கோமல்’ என்ற விழிப்புணர்வு குறும்படத்தை பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.

மேலும், இந்த அட்டையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் எங்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக மாவட்ட கலெக்டரின் கைபேசி, அலுவலகம் மற்றும் முகாம் அலுவலகம் தொலைபேசி எண்களும், 24 மணி நேரம் இலவச சேவையான சைல்டு லைன் 1098 எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்னை கைபேசியில் அழைக்கலாம் அல்லது குறுஞ்செய்தி, வாட்ஸ்-அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

இந்த விழிப்புணர்வு அட்டை மற்றும் ஸ்டிக்கர் 6-ம் முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு மாவட்டம் முழுவதும் வழங்கப்படுகிறது. 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அவர்களது பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் பெரிய அளவிலான போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் மெய் தீண்டாய் இணைய வழி விரைவு குறியீடு அட்டைகள் மற்றும் ஸ்டிக்கர்களை பள்ளி மாணவிகளுக்கு வழங்கினார். மேலும் பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி, வினாடி- வினா போட்டி, கட்டுரைப் போட்டி ஆகிய போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கலெக்டர் பாராட்டினார்.
பின்னர் கலெக்டர் முன்னிலையில் சைல்டு லைன் மூலம் தயாரிக்கப்பட்ட கோமல் விழிப்புணர்வு தமிழ் குறும்படம் பள்ளி மாணவிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப், முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். 

Next Story