காவிரி ஆற்றில் கன்டெய்னர் லாரி பாய்ந்தது; டிரைவர் சாவு போக்குவரத்து பாதிப்பு


காவிரி ஆற்றில் கன்டெய்னர் லாரி பாய்ந்தது; டிரைவர் சாவு போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 Aug 2018 12:12 AM GMT (Updated: 24 Aug 2018 12:12 AM GMT)

பவானியில் பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு காவிரி ஆற்றில் கன்டெய்னர் லாரி பாய்ந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பவானி,

கோவையில் இருந்து சென்னை வேளச்சேரிக்கு கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியை திருச்சி பீமல் நகரை சேர்ந்த சிவக்குமார் (வயது 42) என்பவர் ஓட்டினார். இந்த லாரி ஈரோடு மாவட்டம் பவானி காவிரி ஆற்றுப்பாலத்தில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் வந்துகொண்டு இருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு காவிரி ஆற்றுக்குள் பாய்ந்தது.

இதனைப்பார்த்ததும் அந்த வழியாக வந்தவர்கள் இதுபற்றி சித்தோடு போலீசார் மற்றும் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்போது ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் கன்டெய்னர் லாரியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

விபத்துபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மற்றும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் ஆற்றுக்குள் விழுந்து கிடந்த லாரியை பார்வையிட்டதோடு, மீட்பு பணியையும் துரிதப்படுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 7 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டது. பின்னர் ஆற்றுக்குள் பாய்ந்த கன்டெய்னர் லாரியை மீட்கும் பணி நடந்தது. இந்த பணியில் படகு ஓட்டுனர்கள், மீனவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். காலை 7.30 மணி அளவில் லாரி மீட்கப்பட்டது.

அப்போது லாரிடிரைவர் சிவக்குமார் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்து கிடந்தார். இதையடுத்து சிவக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரியில் சிவக்குமார் மட்டும்தான் இருந்தாரா? அல்லது அவருடன் கிளனர் யாரும் வந்தனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவிரி ஆற்றுக்குள் பாய்ந்த லாரியை மீட்கும் பணி நடைபெற்றதால் பவானியில் இருந்து சேலம் செல்லும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து வேறு பாதையில் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது. அதன் பின்னர் நேற்று பகல் 11.30 மணி அளவில் போக்குவரத்து நிலமை சீராகியது.

காவிரி ஆற்றுப்பாலத்தின் சுவரை உடைத்துக்கொண்டு கன்டெய்னர் லாரி ஆற்றுக்குள் பாய்ந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story