அறம் வளர்த்த கோவில் பொருளாதாரம்
‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’, ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது போன்ற கருத்துகள் நமது நாட்டில் நீண்ட நெடுங்காலமாக பழகி வருபவை.
எப்போது கடவுள் பற்றிய கருத்து மனித உள்ளத்தில் தோன்றியது என்று தெரியாது. ஆனால், அவன் வேட்டையாடி, மீன்பிடித்து காட்டில் வாழ்ந்த காலத்திலேயே அவன் எவற்றை எல்லாம் கண்டு அஞ்சினானோ, அவற்றை எல்லாம் வணங்கினான் என்பது கருத்து. அப்படி முதல் வணக்கம் பெற்றது தீயாக இருக்கலாம் என்று கூறுபவர்கள் உண்டு.
மனிதன் ஆடு, மாடுகளை மேய்த்து இயற்கையை ஓரளவு அறிந்த நிலையில் வேளாண்மையை தொடங்கினான். நாடோடியாக, காடோடியாக அலைந்தவன் நிலைபெற்று வாழத்தொடங்கினான். ஊரும் வீடுகளும் தோன்றின. தான் வணங்கிய தெய்வத்துக்கு கோவில் கட்டினான். அறிவு வளர, வளர அவன் வழிபட்ட முறைகளிலும் மாற்றம் தோன்றின. சமயம் பிறந்தது. இது நீண்ட நெடிய வரலாறு.
தெய்வத்தை உள்ளத்தில் உணர்ந்து வழிபடுவது அக வழிபாடு. அது உயர்ந்த நிலை. கோவில் சென்று சடங்குகளோடும், மரபுகளோடும் வழிபடுவது புற வழிபாடு. இந்த புற வழிபாட்டுக்குப் பொருள் தேவை. இதன் வளர்ச்சி திருவிழாக்கள், தங்கத்தேர் போன்றவை.
இப்படித் தான் மக்கள் உணராமலேயே கோவில் பொருளாதாரம் தோன்றியது.
‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்கிறார், வான்புகழ் கொண்ட வள்ளுவர். பொருள் இல்லார்க்கு இன்று பெருங்கோவில் வழிபாடோ, தீர்த்த யாத்திரையோ இல்லை. பொருள் இருப்பவர்களுக்கு கோவில் வழிபாட்டிலும் தனிச்சிறப்பு. கட்டணம் கட்டித்தான் சாமி தரிசனம் என்ற நிலையில் பொருளின் ஆதிக்கத்தை உணர்கிறோம்.
ஆனால், கோவில் பொருளாதாரத்தின் வேர்களும், விழுதுகளும் வேறுநோக்கில் அமைந்தவை. எல்லா மக்களும் தங்களுடைய சக்திக்கேற்ப உழைப்போ, பொருளோ வழங்கி கோவிலை உருவாக்கினர். அதாவது கோவில் சார்ந்த ஓர் அற உணர்வில் தோன்றிய பொருளாதாரம் இது.
கோவிலுக்கு பொன்னும் பொருளும் தருபவர்கள் உண்டியலில் போடுவது என்ற முறையின் உயர்ந்த நோக்கத்தை உணர வேண்டும். இதில் யார், எதை, எவ்வளவு போட்டார்கள் என்பது தெரியாது. அதில் போட்டது எல்லாம் பொதுவானது. அதை அறப்பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும். அதை நிர்வகிப்பவர்கள் அறங்காவலர்கள்.
இடைக்காலத்தில் தான் கோவிலுக்கு நன்கொடை அளிப்பவர்களின் பெயர்களை கல்வெட்டில் பதிப்பது, அவர்களுக்கு தனி மரியாதை செய்வது போன்ற பழக்கங்கள் தோன்றின. கோவில் வருவாயை பெருக்கும் உத்திகளையும் கண்டறிந்தனர்.
ஆதிகாலத்தில் சொத்துகளும், வருவாய்களும் கேட்காமலேயே கிடைத்தன. கோவிலில் வழிபாடு தொடர்ந்து நடைபெற அரசர்கள் மானியம் கொடுத்தனர், நிலங்கள் வழங்கினர். செல்வந்தர்கள் தங்கள் வளம் செழிக்க காணிக்கை போட்டனர். எல்லா மக்களும் இயன்றதை அளித்தனர். கோவிலின் வருவாயை வழிபாட்டு செலவுக்கு மேல் வந்த பணத்தை அறப்பணிகளுக்கு செலவிட்டனர்.
பல கோவில்களில் தர்மசாலைகள் செயல்பட்டன. பசித்து வந்தவர்களுக்கு புசிக்க உணவு அளித்தனர். பள்ளிகள் நடத்தினர். கலைகள் வளர்த்தனர். ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடத்தினர். கோவில் திருவிழா என்றால் 3 நாட்கள், 10 நாட்கள் சிறப்பு வழிபாடு செய்ய, கண்டுகளிக்க, கொண்டாடி மகிழ தக்க வகையில் வழிவகை செய்வார்கள்.
இதற்கான பொருள் கணக்கின்றி வந்தது. கவனத்தோடு தன்னலமின்றி நிர்வகித்தனர். இது தான் கோவில் பொருளாதாரமாக, அறப்பொருளாதாரமாக வளர்ந்தது. இவற்றை எல்லாம் ‘கண்ணுக்குத் தெரியாத கை’ தோன்றா துணையாக இருந்து நிர்வகிப்பதாக மக்கள் நம்பினர்.
இன்றும் கிராமக் கோவில்களில் இந்த அறம் ஓரளவு செயல்படுகின்றது. திருவிழா என்றால் ஊர் மக்கள் எல்லோரும் வரி கொடுப்பார்கள். வசதியானவர்கள் நன்கொடை வழங்குவார்கள். கோவில் வழிபாட்டில் பாகுபாடு இருக்காது. சாமிக்கு படைப்பது எல்லோருக்கும் சமமாக கிடைக்கும். இது கோவில்கள் வளர்க்கும் சமத்துவ பொருளாதாரம்.
பொதுவாக இன்று சிறப்பு வாய்ந்த பெரிய கோவில்களும், வருவாய் மிகுந்த ஆலயங்களும் வளர்த்திருக்கின்ற பொருளாதாரம் வேறு. இது வாணிப பொருளாதாரமாக மாறிய நிலை. சில கோவில்களில் இருக்கும் பெருவாரியான சொத்துகளுக்கு கணக்கும் இல்லை, வழக்கும் இல்லை. எடுத்துக்காட்டாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பெரிய கோவிலின் நகைகள், பொருட்கள் இருக்கும் எல்லா அறைகளும் இன்னும் திறக்கப்படவில்லை.
இன்று நமது நாட்டில் கோவில்களிலேயே மிகுதியாக வருவாய் உள்ள கோவில் திருப்பதி தான். வரிசையில் நின்று மக்கள் கணக்கின்றி உண்டியலில் காணிக்கை செலுத்துவதை காணலாம். இறைவன் பற்றிய அச்சம் போய் விட்டது. இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கோவிலை நிர்வகிக்கும் நிலை.
சமீபகாலமாக கோவிலில் உள்ள விலை மதிப்பற்ற சாமி விக்கிரகங்களும், ஆபரணங்களும், பிற பொருட்களும் காணாமல் போகின்றன. இப்படிப்பட்ட குற்றங்களை விசாரிக்க தனியாக போலீஸ் அதிகாரியை நியமித்து இருக்கின்றனர். சிலர் அகப்பட்டுள்ளனர். அறப் பொருளாதாரமாக தோன்றிய கோவில் பொருளாதாரம் சுரண்டல் பொருளாதாரமாகவும், கொள்ளை பொருளாதாரமாகவும் மாறி விடுமோ? என்ற அச்சம் தோன்றுகிறது.
மொத்தத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கோவில் பொருளாதாரம் வழி மாறிப்போகிறது. கோவில்களை, சொத்துகளும் வருவாயும் நிறைந்த நிறுவனங்களாக பார்க்கும் வாணிபக் கண்ணோட்டம் வந்து விட்டது. கோவில் நிர்வாகிகளிடமும், ஊழியர்களிடமும் அது உண்மையாகிவிட்ட அவலத்தை காண்கிறோம்.
உண்மையில் கோவில்கள் வளர்த்தது, தனிவகை அறப்பொருளாதாரம். இது மக்களிடம் அன்பை வளர்ப்பது, அருளை உள்ளொளியாக வளர்ப்பது, கொடை கொடுக்கும் பணத்தை இறை நம்பிக்கையின் அடிப்படையில் நமது முன்னோர்கள் வளர்த்தார்கள்.
‘அந்த அறப்பொருளாதாரத்தை மீட்டு வளர்ப்போம்’. அது நம்மை மட்டுமல்ல உலகைக் காக்கும்.
-டாக்டர் மா.பா.குருசாமி,
காந்திய பொருளியல் அறிஞர்
Related Tags :
Next Story