சமூக கருத்துகளை ஓவியமாக்கும் மாணவி...!
அமீரகத்தில் இந்திய மாணவ-மாணவிகள் அதிக அளவில் படித்து வருகின்றனர். இவர்களில் பலர் பல்வேறு திறமைகளை கொண்டுள்ளனர்.
கல்வி, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் சிறப்பான முறையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளை வென்று வருகின்றனர். இத்தகைய சிறப்பிடத்தை பெற்று வருபவர்களில் துபாயை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி தஸ்னீம் அபுதாஹிரும் ஒருவர். இவர் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியைச் சேர்ந்தவர். 5 வயதிலிருந்து ஓவியம் வரைந்து வரும் தஸ்னீம், இதுவரை 150-க்கும் மேற்பட்ட ஓவிய போட்டிகளில் பரிசு கோப்பைகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் வென்றிருக்கிறார். குறிப்பாக துபாய் நகரில் நடைபெறும் ஓவியப்போட்டிகளில் தஸ்னீமின் ஓவியம் இடம்பெறாமல் இருக்காது. அந்தளவிற்கு ஓவியப்போட்டிகளில் முனைப்பு காட்டுகிறார்.
இவரது ஓவியங்கள் பெரும்பாலும் சமூக சிந்தனைகளை முன்நிறுத்துகின்றன. தண்ணீர் சேகரிப்பு, மின் சேமிப்பு, வெப்பமயமாதல், வாட்ஸ் அப் திருடர்கள், சமூக வலைத்தளங்களின் அத்துமீறல்கள்... என இவரது ஓவியங்களில் சமூக சிந்தனைகள் தவழ்ந்தோடுகின்றன.
‘‘ஓவியங்களால் சமூக கருத்தை மிக சுலபமாக சொல்லமுடியும் என்று நான் நம்புகிறேன். அதைதான் செய்து வருகிறேன். நடப்பு செய்திகளுக்கு சம்பந்தப்பட்ட தலைப்புகளில் ஓவியம் வரைவதால் பரிசுகள் குவிகிறது. கருத்து ஓவியங்கள் மட்டுமின்றி, பிரபலங்களின் தத்ரூப ஓவியங்களையும் வரைந்து கொடுக்கிறேன். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு சுற்றுலா வரும் தமிழ்நாட்டு பிரபலங்களை என்னுடைய தூரிகைகள் குறிவைக்கின்றன. அவர்களில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கவிப்பேரரசு வைரமுத்து, பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், ஆளூர் ஷா நவாஸ், கவிஞர் சல்மா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்’’ என்றவர், ஓவியம் மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்.
கணிதத்தில் ஆர்வத்துடன் திகழ்ந்து வரும் இவர் அபாகஸ் உள்ளிட்ட மனக்கணக்கு போட்டி மற்றும் சர்வதேச கணிதவியல் போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். கைவினைப் பொருட்களை தயாரிக்கும் வல்லமையும் பெற்றுள்ளார். மேலும் அரிய வகையான நாணயங்கள் சேகரிப்பதிலும் முனைப்பு காட்டி வருகிறார். இந்தியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 52 நாடுகளைச் சேர்ந்த நாணயங்களை சேகரித்து வைத்துள்ளார். இந்த நாணயங்களில் தற்காலத்தைச் சேர்ந்தவை மட்டுமல்லாமல் புராதன காலத்து நாணயங்களும் இடம்பிடித்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
தந்தை அபுதாஹிர், தாயார் முஹபத் நிஷா ஆகியோருடன் துபாயில் வசித்து வரும் தஸ்னீமிற்கு ரிபா பாத்திமா மற்றும் ரீம் அபுதாஹிர் ஆகிய சகோதரிகளும் உள்ளனர். இதுவரை 300-க்கும் மேற்பட்ட சமூக சிந்தனை ஓவியங்களை தீட்டியிருக்கும் தஸ்னீம், அவைகளை விரைவில் காட்சிப்படுத்த உள்ளார்.
Related Tags :
Next Story