வாஜ்பாய் அஸ்தி நாளை நெல்லை கொண்டு வரப்படுகிறது பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நெல்லைக்கு நாளை (சனிக்கிழமை) கொண்டு வரப்படுகிறது. அந்த அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
நெல்லை,
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நெல்லைக்கு நாளை (சனிக்கிழமை) கொண்டு வரப்படுகிறது. அந்த அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து நெல்லை கிழக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர் தயா சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வாஜ்பாய் அஸ்தி
மறைந்த முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ந் தேதி டெல்லியில் காலமானார். அவரது அஸ்தியை நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, வாஜ்பாய் அஸ்தி கன்னியாகுமரி கடலிலும், பாபநாசம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றிலும் கரைப்பதற்காக 2 அஸ்தி கலசங்கள் திருச்செந்தூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) பகல் 12 மணி அளவில் நெல்லை கொண்டு வரப்படுகிறது.
பொதுமக்கள் அஞ்சலி
பாளையங்கோட்டை ராமசாமி கோவில் மைதானத்தில் பகல் 1 மணி அளவில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. மதியம் 2.15 மணி அளவில் ஒரு அஸ்தி கலசம் மட்டும் அங்கு இருந்து வள்ளியூர் கொண்டு செல்லப்படுகிறது. அந்த அஸ்தி வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னர் மாலை 3.15 மணி அளவில் அந்த அஸ்தி புறப்பட்டு ஆரல்வாய் மொழி வழியாக கன்னியாகுமரி கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக் கப்படும். மற்றொரு அஸ்தி கலசம் வருகிற 26-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். பாளையங்கோட்டை குலவணிகர்புரம், மேலப்பாளையம், முன்னீர்பள்ளம் வழியாக காலை 8.45 மணிக்கு கல்லிடைக்குறிச்சியை சென்றடைகிறது. அங்குள்ள தேரடி திடலில் பொது மக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்படுகிறது.
அஸ்தி கரைப்பு
பின்னர் அங்கு இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு அம்பை கொண்டு செல்லப்படுகிறது. அங்குள்ள கல்யாணி திரையரங்கம் முன்பு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் காலை 11 மணி அளவில் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story