களக்காடு அருகே தொழிலாளியை அடித்துக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
களக்காடு அருகே தொழிலாளியை அடித்துக்கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நெல்லை,
களக்காடு அருகே தொழிலாளியை அடித்துக்கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தொழிலாளி கொலை
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி தெற்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் கணபதி (வயது 44), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி சத்திரம் குடியிருப்பு கிராமத்தில் நடைபெற்ற ஒரு கோவில் திருவிழாவுக்கு சென்றிருந்தார். அங்கு பெண்களை கேலி செய்தது தொடர்பாக கணபதிக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் மறுநாள் காலையில் கணபதி அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கணபதி செங்கலால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
2 பேருக்கு ஆயுள் தண்டனை
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சத்திரம் குடியிடிப்பை சேர்ந்த பால்ராஜ் மகன் பாலமுருகன் (29), வின்சென்ட் மகன் ஜெகன் (24) ஆகிய 2 பேரும் கணபதியை மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்று, அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நெல்லை 3-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி ஜெயராஜ் வழக்கை விசாரித்து நேற்று கணபதியை கொலை செய்த குற்றத்துக்கு பாலமுருகன் மற்றும் ஜெகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கடத்திச் சென்றதற்கு 2 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து கோர்ட்டில் ஆஜராகி இருந்த 2 பேரையும் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராமமூர்த்தி ஆஜரானார்.
Related Tags :
Next Story