புன்னக்காயலில் ரூ.52 கோடியில் தடுப்பணை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தகவல்


புன்னக்காயலில் ரூ.52 கோடியில் தடுப்பணை குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 Aug 2018 4:00 AM IST (Updated: 24 Aug 2018 6:44 PM IST)
t-max-icont-min-icon

புன்னக்காயலில் ரூ.52 கோடியில் தடுப்பணை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

தூத்துக்குடி, 

புன்னக்காயலில் ரூ.52 கோடியில் தடுப்பணை அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியுள்ளார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர்(பயிற்சி) அனு, வேளாண்மை இணை இயக்குனர் புருஷோத்தமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

கடம்பாகுளம் 9–வது மடையின் கீழ் உள்ள பாசன வடிகாலில் தடுப்பணை கட்ட வேண்டும். தாமிரபரணி நேரடி பாசனத்தில் உள்ள பல குளங்கள் நிரம்பாமல் உள்ளது. ஆனால் தண்ணீர் ஸ்ரீவைகுண்டம் அணையை கடந்து கடலுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை சடையநேரி கால்வாயில் திறந்து விட வேண்டும். முக்காணி தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தாமிரபரணியில் உள்ள 4 கால்வாய்களின் கொள்ளளவை அதிகரிக்கவும், ஸ்ரீவைகுண்டம் அணையின் உயரத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும்

தாமிரபரணியில் உள்ள மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் ஆகிய 4 கால்வாய்களையும் தூர்வார வேண்டும். மருதூர் மேலக்காலில் உள்ள தென்கரை குளத்துக்கு 20 சதவீதம் தண்ணீரே வந்து உள்ளது. அதன் கீழ் உள்ள 6 குளங்களுக்கு முழுமையாக தண்ணீர் வரவில்லை. மேலக்காலில் உள்ள அமலைச் செடிகளை அகற்ற வேண்டும். கருமேனியாற்றில் சீமைக்கருவேல மரங்கள் அதிகமாக உள்ளது. அதனை அகற்ற வேண்டும்.

2016–17–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு தொகை இன்னும் பல பயிர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு தொகையை விரைந்து வழங்க வேண்டும். மேலநம்பிபுரம், படர்ந்தபுளி பகுதியில் 400 விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

ஸ்ரீவைகுண்டம் கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்து உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து கலெக்டர் சந்தீப் நந்தூரி பதில் அளித்து பேசியதாவது:–

41 குளங்களுக்கு தண்ணீர் வந்துள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பான அளவு மழை பெய்யவில்லை என்றாலும், போதுமான அளவு தண்ணீர் உள்ளது. கடந்த வாரம் தாமிரபரணி ஆற்றில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றது. அப்போது 4 கால்வாய்கள் மூலம் குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதில் 41 குளங்களுக்கு தண்ணீர் வந்து உள்ளது. 12 குளங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. சடையநேரி கால்வாயிலும் தண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது. குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் உள்ள கால்வாய் கொள்ளளவை அதிகரிப்பது, ஸ்ரீவைகுண்டம் அணையின் உயரத்தை அதிகரிப்பது தொடர்பாக உரிய ஆய்வு செய்யப்படும்.

சடையநேரி கால்வாய் தாமிரபரணி ஆற்றில் இருந்து செல்லும் பிரதான கால்வாய் கிடையாது. கால்வாய் குளத்தின் உபரிநீர் கால்வாய் ஆகும். 40 கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்த சடையநேரி கால்வாயில் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தற்போது 6 குளங்கள் 50 சதவீதம் நிரம்பி உள்ளது.

புன்னக்காயலில் தடுப்பணை

இந்த கால்வாயில் படுக்கப்பத்து, புத்தன்தருவை பகுதியில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாயிகளே தூர்வாரி உள்ளனர். மீதம் உள்ள கால்வாய் விரைவில் தூர்வாரப்படும். முக்காணி தடுப்பணை 70 சதவீதம் பணிகள் முடிந்து உள்ளன. தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் புன்னக்காயல் பகுதியில் ரூ.52 கோடி செலவில் ரெகுலேட்டர் தடுப்பணை அமைப்பதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளது. தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நிரம்பாத குளங்களும் விரைவில் நிரம்பும். ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்த அமலைச் செடிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளது. கால்வாய்களில் அடைத்து இருந்த அமலைச் செடிகள் அகற்றப்பட்டு உள்ளன.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

மேலும் அதிகாரிகள் கூறுகையில், 2016–17–ம் ஆண்டு பயிர்காப்பீடு தொகை கம்பு, வெங்காயம், கடலை, எள் ஆகிய பயிர்களுக்கு தயாராகி உள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். சோளம், பருத்தி, சூரியகாந்தி, வாழை, கரும்பு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டம் கூட்டுறவு வங்கியில் துணைபதிவாளர் விசாரணை நடத்தி உள்ளார். அதில் முறைகேடுகள் இருப்பதாக தெரியவில்லை. தொடர்ந்து சந்தேகங்கள் இருந்தால் இணைப்பதிவாளர் 15 நாளில் விசாரணை நடத்துவார். முறைகேடுக்கான ஆதாரங்களை கொடுத்தால், உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

முன்னதாக, வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த நோட்டீசை கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்.


Next Story