வாசுதேவநல்லூரில் குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
வாசுதேவநல்லூரில் குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாசுதேவநல்லூர்,
வாசுதேவநல்லூரில் குடிநீர் கேட்டு யூனியன் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீரான குடிநீர் வினியோகம்நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நெல்கட்டும்செவல் பஞ்சாயத்துக்கு உட்பட்டது அம்மன்குளம் கிராமம். இங்கு 600–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக கிராமத்திற்கு தென்புறம் 2 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து, ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் தினமும் காலை 2 மணி நேரம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் சீராக வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டால் ஆழ்குழாய் கிணறு பழுதடைந்து விட்டது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூடலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகினர்.
முற்றுகை போராட்டம்இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன் சம்பவ இடத்திற்கு வந்த பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொதுமக்கள் எங்கள் பகுதியில் உள்ள 2 ஆழ்குழாய் கிணறுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, மோட்டார்களை சரிசெய்து, சீராக குடிநீர் வழங்க வேண்டும், இல்லை என்றால் அனைவரும் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கூறினர். உடனே அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.