திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு 15-வது நாளாக குளிக்க தடை
திற்பரப்பு அருவியில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 15-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
குலசேகரம்,
குமரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் சுற்றுலா தலங்களில் திற்பரப்பு அருவி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும், கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து, அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி செய்து, பூங்காவில் விளையாடி குதூகலத்துடன் வீடு திரும்புகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த 10-ந் தேதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு பேனர் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் பேரூராட்சி ஊழியர்கள் 2 பேர் அருவியின் அருகே யாரும் செல்லாதவாறு கண்காணித்தனர்.
தொடர்ந்து மலையோர பகுதியில் கன மழை பெய்ததாலும், அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதாலும் அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டிக் கொண்டே இருந்தது. இதனால், தடை உத்தரவு நீடித்தது.
தற்போது, மழை குறைந்தாலும் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், அருவியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று 15-வது நாளாக தடை நீடித்தது. அதே நேரத்தில் சிறுவர் பூங்காவில் மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால், நேற்று திற்பரப்புக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இன்று (சனிக்கிழமை) ஓணப்பண்டிகையையொட்டி அதிகளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். தண்ணீர் அளவு குறைந்தால் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story