ஓணம் பண்டிகை: தோவாளை மார்க்கெட்டில் விடிய விடிய வியாபாரம்


ஓணம் பண்டிகை: தோவாளை மார்க்கெட்டில் விடிய விடிய வியாபாரம்
x
தினத்தந்தி 25 Aug 2018 3:15 AM IST (Updated: 25 Aug 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் விடிய விடிய வியாபாரம் நடந்தது. நேற்று ஒரே நாளில் 50 டன் பூக்கள் விற்பனையானது.

ஆரல்வாய்மொழி,

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இவற்றை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வார்கள். வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். பண்டிகை நாட்களில் விலை பல மடங்காக உயர்ந்து காணப்படும். சாதாரண நாட்களில் விலை குறைவாக இருக்கும்.

ஓணம் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் ஏராளமான கேரள வியாபாரிகள் குவிந்தனர். ஓணம் சிறப்பு விற்பனையாக நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய வியாபாரம் நடந்தது.
இதற்காக தோவாளை மார்க்கெட்டில் மின் விளக்குகள் அமைத்து சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், ஏராளமான பூக்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. நேற்று ஒரே நாளில் சுமார் 50 டன் பூக்கள் விற்பனையானதாக பூ வியாபாரி கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ஓணம் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவார்கள். இந்த ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகள் களை கட்டவில்லை. எனவே, வழக்கமாக வரும் வியாபாரிகள் வரமாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால், எங்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஏராளமான கேரள வியாபாரிகள் வந்தனர். அவர்கள் தங்களின் தேவைக்கு ஏற்றப்படி பூக்களை வாங்கி சென்றனர் என்றார்.
ஓணம் பண்டிகையையொட்டி நேற்று தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்தது. நேற்று முன்தினம் கிலோ ரூ.300-க்கு விற்பனையான பிச்சி, முல்லை ஆகிய பூக்கள் தலா ரூ.450 உயர்ந்து கிலோ ரூ.750-க்கு விற்பனையானது. அதுபோல், மல்லிகை ரூ.350-ல் இருந்து ரூ.500 ஆகவும், கனகாம்பரம் ரூ.600-ல் இருந்து ரூ.800 ஆகவும் உயர்ந்தது.

தோவாளை பூ மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளிப்பூ ரூ.250, வாடாமல்லி ரூ.100, சிவப்பு கேந்தி ரூ.70, ரோஜா (100 எண்ணம்) ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.250, துளசி ரூ.50, தாமரை (100 எண்ணம்) ரூ.1500, பச்சை ரூ.10, கோழிப்பூ ரூ.50, கொழுந்து ரூ.100, மருக்கொழுந்து ரூ.100, மஞ்சள் கேந்தி ரூ.50, மஞ்சள் சிவந்தி ரூ.250, வெள்ளை சிவந்தி ரூ.250, ஸ்டெம்புரோஸ் (1கட்டு) ரூ.250. 

Next Story