2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகாற்சோழனால் கட்டப்பட்ட கல்லணைக்கு மண் அரிப்பினால் ஆபத்தா?


2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகாற்சோழனால் கட்டப்பட்ட கல்லணைக்கு மண் அரிப்பினால் ஆபத்தா?
x
தினத்தந்தி 25 Aug 2018 4:30 AM IST (Updated: 25 Aug 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

காவிரி கரையில் தரைப்பாலம் அமைக்கும்போது முண்டு கற்கள் திருட்டு போய் உள்ளது. இதனால், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கரிகாற்சோழனால் கட்டப்பட்ட கல்லணைக்கு மண் அரிப்பினால் ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருச்சி,

முற்கால சோழர்களின் ஆட்சியில் கரிகாற்சோழ மன்னனால் கட்டப்பட்டது கல்லணை. காவிரியின் குறுக்காக சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த அணை தான் உலக வரலாற்றில் தமிழர்களின் பொறியியல் திறனை பறைசாற்றுவதாக உள்ளது. இந்த அணையின் மூலம் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் காவிரி நீரை சேமித்து வைத்து தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய காவிரி பாசன மாவட்டங்களுக்கு காலம் காலமாக சாகுபடி பணிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

பெருக்கெடுத்து ஓடிய காவிரி ஆற்றின் நடுவில் பெரிய அளவிலான கற்களை பல அடி ஆழத்திற்கு ஒன்றின்மேல் ஒன்றாக போட்டு அவற்றின் மீது ஒரு வகையான ஒட்டும் திறன் கொண்ட பசை போன்ற சுண்ணாம்பு கலவையை தடவி இந்த அணை கட்டப்பட்டு இருப்பதால் தான் 2 ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டி எந்த வித விரிசலும் இன்றி உறுதியுடன் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது. கல்லணை தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்து இருந்தாலும் திருச்சியில் இருந்து இதனை அடைவதற்கான தூரம் 18 கி.மீ தான்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த காவிரி கரையோர கிராமங்களான பொன்னுரங்கபுரம், பனையபுரம், திருவளர்சோலை, நடுவெட்டி, உத்தமர் சீலி, கிளிக்கூடு ஆகியவை கல்லணைக்கு செல்லும் வழியில் உள்ளன. இதில் உத்தமர்சீலிக்கும், கிளிக்கூடு கிராமத்திற்கும் இடையில் சுமார் 2½ கி.மீ தூரம் காவிரியில் வெள்ளம் ஏற்பட்டால் அந்த வெள்ள நீர் இடதுபுறமாக வடிந்து கொள்ளிடம் ஆற்றில் கலக்கும் வகையிலான தாழ்வான பகுதியாகும். இந்த தாழ்வான பகுதியில் கல்லணையை கட்டிய காலத்தில் மிகவும் அரிதான ஒரு வகையான முண்டு கற்கள் ஏராளமாக தரையில் பதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருச்சியில் இருந்து திருவளர்சோலை வழியாக கல்லணை வரை இருந்த அகலம் குறைந்த சாலைக்கு பதிலாக அகலமான சாலை சுமார் ரூ.35 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த சாலைப்பணி நடந்தபோது பழங்கால முண்டு கற்கள் எல்லாம் பெயர்த்து எடுக்கப்பட்டது. அந்த முண்டு கற்கள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. அப்போது இந்த கற்கள் திடீர் என காணாமல் போய்விட்டதாகவும், அவற்றை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தமர்சீலி கிராமத்தை சேர்ந்தவர்கள் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அனுப்பினர்.

இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் இருந்து திருச்சி நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், திருச்சி நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர், தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், சாலை அமைக்கும் பணி நடந்தபோது ஒப்பந்ததாரரால் கட்டுமான பொருட்களை லாரிகளில் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய முயன்றபோது, துறை மூலம் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் இரவு நேரங்களில் ஊர் மக்கள் தடுத்ததையும் மீறி முண்டு கற்கள் திருடப்பட்டு உள்ளது. இப்படி திருடப்பட்ட முண்டு கற்கள் உடைக்கப்பட்டு திருச்சியில் ஒரு இடத்தில் மதில் சுவராக கட்டப்பட்டு உள்ளது. இதனை மீட்டு நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த புகார் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திருட்டு போன பழமையான முண்டு கற்கள் மீட்கப்பட்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவும் இல்லை.

இந்த முண்டு கற்கள் பெயர்த்து எடுத்து அப்புறப்படுத்தப்பட்டதால் மண் அரிப்பு ஏற்பட்டு கல்லணைக்கே ஆபத்தாக முடியும் என்கிறார் பொதுப்பணித்துறை நீராதார துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாத அவர் இதுபற்றி கூறுகையில், ‘உத்தமர்சீலிக்கும்- கிளிக்கூடுக்கும் இடையில் காவிரி ஆறு சற்று தாழ்வான நிலையில் செல்லும். இது கல்லணையை காவிரி எளிதாக அடைவதற்கு செய்யப்பட்ட வசதியாகும். வெள்ள காலங்களில் இந்த பகுதியில் வழியும் நீரால் மண் அரிப்பு ஏற்பட்டு அதனால் கல்லணைக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே முண்டு கற்கள் பதிக்கப்பட்டு இருக்கலாம். இது ஒரு வகையான நீரியல் பாதுகாப்பு தொழில்நுட்பமாகும். ஆனால் இந்த தொழில்நுட்பத்தை சிதைக்கும் வகையில் தரைப்பால பணியின்போது அந்த பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த முண்டு கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதனால் வெளியேறிய நீர் இந்த தரைப்பால சாலை வழியாக சென்றபோது தான் முண்டு கற்கள் திருட்டு போனது வெளி உலகிற்கு தெரியவந்து உள்ளது. 1977 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை போன்று மீண்டும் ஒரு வெள்ளம் காவிரியில் வந்தால் நிச்சயமாக இந்த தரைப்பாலம் தாங்காது. அத்துடன் மண் அரிப்பும் ஏற்பட்டு அதன் மூலம் கல்லணையின் உறுதி தன்மைக்கே கூட பேராபத்து ஏற்படலாம். எனவே தமிழக அரசு திருட்டு போன முண்டு கற்களை கண்டுபிடித்து அவற்றை மீண்டும் அவை இருந்த இடத்தில் புதைத்து அதன் மேல் பகுதியில் தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் தான் மண் அரிப்பினை தாங்க முடியாமல் 182 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சி கொள்ளிடம் மேலணையின் 9 மதகுகள் இடிந்து விழுந்து உள்ளன என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், விவசாயி களும் குற்றம் சாட்டி வருகிறார்கள். கரிகாற்சோழன் கட்டிய கல்லணை தான் கொள்ளிடம் மேலணையை கட்டுவதற்கு தனக்கு தூண்டுகோலாக இருந்தது என்று அதனை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் ஆர்தர் காட்டன் கூறி இருப்பதாக வரலாற்றில் கூறப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கொள்ளிடம் அணைக்கும் முன்னோடியான கல்லணைக்கு மண் அரிப்பினால் ஒரு ஆபத்து ஏற்படலாமா? இதனை உடனே தடுத்து நிறுத்தி அணையை பாதுகாக்க உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் தார்மீக கடமையாகும்.

Next Story