கொள்ளிடம் அணை இடிந்ததற்கு அதிகாரிகள் கவனக்குறைவே காரணம்


கொள்ளிடம் அணை இடிந்ததற்கு அதிகாரிகள் கவனக்குறைவே காரணம்
x
தினத்தந்தி 25 Aug 2018 4:30 AM IST (Updated: 25 Aug 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அணை இடிந்ததற்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

ஜீயபுரம்,

திருச்சி அருகே முக்கொம்பு கொள்ளிடத்தில் உள்ள அணையில் கடந்த 22-ந் தேதி அணையுடன் 9 மதகுகள் உடைந்தன. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து சென்றது. கொள்ளிடத்தில் தண்ணீர் குறைவாக வந்து கொண்டிருப்பதால் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக முக்கொம்பு சுற்றுலா மையத்தில் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பணியில் இருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. பின்னர் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி கொள்ளிடம் அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

அண்டை மாநிலங்களில் நீர் மேலாண்மை மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் நீர் மேலாண்மையை செயல்படுத்தாதது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. அதனால், கொள்ளிடத்தில் தண்ணீர் பாசனத்திற்கு பயன்படாமல் வீணாக செல்கிறது. கொள்ளிடம் அணை இடிந்ததற்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம். மற்ற மாநிலங்களில் விவசாய பரப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது.

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் குறிப்பிட்ட அளவு மணல் அள்ளுவதற்கு பதிலாக 40 அடிக்கும் மேலாக பள்ளம் தோண்டி மணல் அள்ளுகின்றனர். நாளைய சந்ததியினருக்கு ஊற்றுநீர் கூட கிடைக்காத நிலை உள்ளது. தற்போது இந்த அணையை பராமரித்து பாதுகாக்க வேண்டும். மேலும் புதிய அணை கட்ட மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டப்பட வேண்டியது. ஆனால் கட்டப்படும் புதிய அணை பல வருடங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு கட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவருடன் மாநில துணைத் தலைவர் கண்ணதாசன், மாநில துணை பொது செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் இருந்தனர்.

Next Story