3 கடைகள்-ஓட்டலுக்கு சீல் வைப்பு வருவாய்த்துறையினர் நடவடிக்கை
கும்பகோணத்தில் 3 கடைகள் மற்றும் ஓட்டலுக்கு வருவாய்த்துறையினர் நேற்று பூட்டி சீல் வைத்தனர்.
கும்பகோணம்,
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவர் தன்னுடைய தொழில் அபிவிருத்திக்காக ஒரு தனியார் வங்கியில் ரூ.11 கோடியே 55 லட்சம் கடன் வாங்கி அதனை செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது. இந்த கடனுக்கு ஈடாக கும்பகோணம் திருநாராயணபுரத்தில் உள்ள கட்டிடத்தினை வங்கியில் அடமானம் வைத்திருந்தார். பல ஆண்டுகளாக கடனை திருப்பி செலுத்தாததால் வங்கி நிர்வாகம் அடமான கட்டிடத்தை பொது ஏலம் விட்டது. அந்த கட்டிடத்தை மற்றொருவர் ரூ.12 கோடிக்கு வாங்கிவிட்டார்.
இந்தநிலையில் ஏலம் எடுத்தவர் கட்டிடத்தில் தற்போது வாடகைக்கு இருப்பவர்களிடம் காலி செய்யும்படி கூறினார். ஆனால் அவர்கள் காலி செய்ய மறுத்ததால், முறைப்படி நோட்டீஸ் அனுப்பினார். அதற்கும் அவர்கள் இடத்தை காலிசெய்யவில்லை. பின்னர் தங்களுக்கு கட்டிடத்தின் உரிமையை பெற்றுத்தருமாறு வங்கியை நாடினார்.
இதையடுத்து வங்கி நிர்வாகம் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், தாசில்தார் வெங்கடாஜலம், கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர் மற்றும் போலீசார் திருநாராயணபுரத்துக்கு சென்று கட்டிடத்தில் இருந்த 3 கடைகள் மற்றும் ஓட்டல் ஆகியவற்றை பூட்டி சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story