பஸ் நிலைய கடைகள் ஏலம் 4-வது முறையாக ஒத்திவைப்பு


பஸ் நிலைய கடைகள் ஏலம் 4-வது முறையாக ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 25 Aug 2018 3:15 AM IST (Updated: 25 Aug 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

கீழப்பழுவூர் ஊராட்சிக்கு சொந்தமான புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் 4-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருமானூர்,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழப்பழுவூர் ஊராட்சியில் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் ஆலந்துறையார் கோவிலுக்கு சொந்தமானதாக இருந்தது. ஊருக்கு பஸ்நிலையம் வேண்டும் என்பதால் அந்த இடத்தை ஊராட்சி நிர்வாகம் பணம் கொடுத்து வாங்கியது. முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 5 கடைகளுடன் கூடிய பஸ்நிலையம் கட்டப்பட்டது. ஆனால், இந்த கட்டிடம் கட்டி சுமார் 12 வருடங்கள் ஆகியும் அதில் உள்ள 5 கடைகளும் இதுநாள் வரை மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு நேற்று முன்தினம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லதா ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு வந்தவர்கள் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் மட்டுமல்ல, அங்குள்ள பொது சுகாதார வளாகம் (கட்டண கழிவறை) மற்றும் தரைக்கடைகள், சைக்கிள் நிறுத்தம், வாரச்சந்தை ஆகியவற்றையும் ஏலம் விட வேண்டுமென கூறினர்.

ஆனால் அதிகாரிகள் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றனர். ஆனால் ஏலம் எடுக்க வந்தவர்கள் அனைத்தையும சேர்த்து ஏலம் விடவேண்டும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து ஏலம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஏலம் 4-வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக ஏலத்திற்கு வந்தவர்கள் கூறும் போது, இதற்கு முன் நடைபெற்ற ஏலத்திலும் மேற்கண்ட கோரிக்கைகளை நாங்கள் வைத்தும், அப்போதும் இதே பதிலைத்தான் அதிகாரிகள் கூறிவிட்டு சென்றனர். உண்மையாக இங்குள்ள கடைகள் உள்ளிட்டவைகளை ஏலம் விடுவதற்காக அறிவிப்பு தருகிறார்களா? அல்லது ஏதோ பெயரளவிற்கு தான் ஏலம் நடத்துகிறார்களா? என தெரியவில்லை.

இந்த கடைகள் கட்டி 12 வருடங்களுக்கு மேலாகிறது. ஒருவேளை அந்த கடைகள் இடிந்த பிறகுதான் ஏலம் விடுவார்களா? என தெரியவில்லை. இதுபோன்று தொடர்ந்து ஒத்திவைத்துக்கொண்டே போனால் ஊராட்சி நிர்வாகத்திற்கு எந்த பயனும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏலம் விட வேண்டும் என்று கூறினர்.

Next Story