பரமக்குடிக்கு வந்து சேராத வைகை ஆற்று தண்ணீர்: அணையில் இருந்து போதிய அளவில் நீர் திறக்க கோரிக்கை


பரமக்குடிக்கு வந்து சேராத வைகை ஆற்று தண்ணீர்: அணையில் இருந்து போதிய அளவில் நீர் திறக்க கோரிக்கை
x
தினத்தந்தி 25 Aug 2018 4:15 AM IST (Updated: 25 Aug 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

வைகையில் தண்ணீர் திறக்கப்பட்டும், பரமக்குடி வைகை ஆற்றுக்கு தண்ணீர் வராததால், ஆறு வறண்டு காணப்படுகிறது. எனவே அணையில் இருந்து போதிய அளவில் நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

பரமக்குடி,

வைகை ஆற்றை நம்பி ராமநாதபுரம் மாவட்டத்தில் 54 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், 218 கண்மாய்களும் உள்ளன. தற்போது முல்லைப் பெரியாறு அணையும், வைகை அணையும் நிரம்பி உள்ளன. இந்த நிலையில் வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் என்று அறிவிப்பு இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ள நிலையில் கூட ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது என விவசாயிகளும், பொதுமக்களும் புலம்புகின்றனர். மேலும் குடிநீருக்காவது தண்ணீர் திறந்து விடலாம் என்ற கேள்வியும் எழுப்புகின்றனர்.

முன்பு வைகை ஆற்றில் கை வைத்து தோண்டினாலே தண்ணீர் வரும். ஆனால் இப்போது சூழ்நிலை மாறிப்போய்விட்டது. மண்ணே இல்லாமல் கட்டாந்தரையாக வைகை ஆறு உள்ளது. காட்டு கருவேல மரங்கள், நாணல் புதர்கள், செடிகள் மண்டிப்போய் கிடக்கிறது பரமக்குடி உள்ளிட்ட பல ஊர்களில் சுமார் 300 அடிக்கு கீழே நிலத்தடி நீர்மட்டம் இறங்கிவிட்டது. இதனால் ஏராளமான வீடுகளில் லட்சக்கணக்கில் செலவு செய்து போடப்பட்ட ஆழ்துளைகுழாய்கள் தண்ணீரின்றி வறண்டு போய்விட்டன. இதனால் மீண்டும் பல லட்சம் செலவில் ஆழ்துளைகுழாய்கள் அமைத்து வருகின்றனர். பல கிராமங்களில் குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் கால்நடைகளும், பொதுமக்களும் அலையும் நிலை உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக மழை இல்லாமல் இந்த பகுதியில் விவசாயம் அடியோடு அழிந்து விட்டது. தற்போது பரமக்குடி தாலுகாவில் உள்ள கண்மாய்களும், குளங்களும் சிறிதளவு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன. பல கண்மாய்கள் தூர்வாரப்பட்டும், பல கண்மாய்கள் தூர்வாரப்படாமலும் பயனற்று கிடக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் ரூ.616 கோடியில் அமைக்கப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தான் தற்போது இந்த மாவட்டத்திற்கு கை கொடுப்பதாக உள்ளது.

எனவே தமிழக அரசு இந்த பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்காவது வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வைகை பாசன விவசாயிகள் சங்க பொது செயலாளர் மதுரை வீரன் கூறியதாவது:– அனைத்து அணைகளும் நிரம்பி வழியும் இந்த நேரத்தில் கூட வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இல்லை என்பது மிகுந்த வேதனையாகும். காவிரி நீர் 127 டி.எம்.சி. தண்ணீரும், தாமிரபரணி நீர் 3 டி.எம்.சி. தண்ணீரும், பெரியாறு அணையில் இருந்து 2 டி.எம்.சி. தண்ணீரும் நாளொன்றுக்கு வீணாக கடலில் கலக்கிறது.

இதில் 1½ டி.எம்.சி. தண்ணீரையாவது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கொடுத்தால் மக்கள் பயன்பெறுவார்கள். தற்போது வைகை அணையும், முல்லைப்பெரியாறு அணையும் நிரம்பியுள்ள நிலையிலும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்காமல் உள்ளது ஏமாற்றமளிக்கிறது. இதற்கு ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story