மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்: ராமநாதபுரம் புதிய கலெக்டர் வீரராகவராவ் பேட்டி


மக்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்: ராமநாதபுரம் புதிய கலெக்டர் வீரராகவராவ் பேட்டி
x
தினத்தந்தி 25 Aug 2018 4:30 AM IST (Updated: 25 Aug 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக பதவியேற்றுக்கொண்ட வீரராகவராவ் மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவை உடனடியாக தீர்க்கப்படும் என்று தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக வீரராகவராவ் நேற்று மாலை பதவி ஏற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி பதவி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து புதிய கலெக்டர் வீரராகவராவ் நிருபர்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் முதல்–அமைச்சர் உத்தரவின்பேரில சிறப்பாக செயல்படுத்தப்படும். அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து நகர் மற்றும் கிராம பகுதிகளின் வளர்ச்சி திட்டங்கள், குடிநீர் திட்டங்கள், திடக்கழிவு மேலாண்மை சாலை வசதி போன்ற அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்படும்.

தமிழகத்திலேயே மிக நீண்ட 237 கிலோ மீட்டர் நீள கடற்கரை, 42 ஆயிரத்து 500 மீனவ குடும்பங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. அவர்களுக்கான வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்படும். மாவட்டத்தின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். பிரதமரின் தூய்மை பாரத இயக்கம் சிறப்பாக செயல்படுத்தப்படும். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறையினர் மூலம் தீர்வுகாணப்படும். மாவட்டத்தில் கல்வி சுகாதார பணிகள் விரைவுபடுத்தப்படும். இளைஞர்களுக்கான திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிகள் தீவிரப்படுத்தப்படும்.

மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை. தண்ணீரை வினியோகிக்கும் முறையில் குளறுபடிகள் காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த குறைகள் விரைவில் சரிசெய்யப்படும். வைகை அணையில் இருந்து தண்ணீரை பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் பேஸ்புக், வாட்ஸ்–அப் மூலம் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க செயலி உருவாக்கப்பட்டது. அதன்மூலம் பொது மக்கள் பயன்பெற்றனர்.

அதேபோல ராமநாதபுரம் மாவட்டத்திலும் உருவாக்கப்படும். மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை உடனடியாக தீர்த்து வைக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் வளர்ச்சிதிட்டங்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு கூறினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, திட்ட அலுவலர் ஹெட்சிலீமா அமலினி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லத்துரை, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, உதவி அலுவலர் கயிலைசெல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவிற்கு வயது 41. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2007–ல் ஐ.ஏ.எஸ் தேர்வு பெற்று மதுரை மாவட்ட பயிற்சி கலெக்டராக பணியாற்றினார். பின்னர் சேரன்மாதேவி சப்–கலெக்டர், கடலூர் மாவட்ட கூடுதல் கலெக்டர், திருச்சி மாநகராட்சி ஆணையாளர், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட திட்ட அலுவலர், 2012 முதல் 2016 வரை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், 2016 முதல் 2018 வரை மதுரை மாவட்ட கலெக்டர் ஆகிய பணிகளில் பணியாற்றி உள்ளார். இவருக்கு டாக்டர் ஹசந்திகாவீர் என்ற மனைவியும், அருணவ்வீர், விக்னஜித்வீர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.


Next Story