முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை: தெ.புதுக்கோட்டை மணல் குவாரியில் நவீன கேமரா மூலம் கண்காணிப்பு


முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை: தெ.புதுக்கோட்டை மணல் குவாரியில் நவீன கேமரா மூலம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 25 Aug 2018 4:30 AM IST (Updated: 25 Aug 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை அரசு மணல் குவாரியில் நவீன கேமரா மூலம் கண்காணிப்பதால் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மானாமதுரை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு மணல் குவாரி செயல்படாததால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து அரசு உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வைகை ஆற்றில் குவாரி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி மானாமதுரை பகுதியில் வாகுடி, செய்களத்தூர், தெ.புதுக்கோட்டை ஆகிய 3 இடங்களில் வைகை ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக தெ.புதுக்கோட்டையில் கடந்த 13–ந்தேதி தாசில்தார் சுந்தரராஜன் தலைமையில் குவாரி தொடங்கப்பட்டது. அப்போது 13 லாரிகளில் மணல் அள்ளி பொதுப்பணித்துறை குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் குவாரியில் மின் இணைப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்துவது போன்ற பணிகள் நடந்து வந்தன.

இந்தநிலையில் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது குவாரியில் மணல் அள்ளி லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கூறியதாவது:–

பொதுப்பணித்துறை சார்பில் குவாரி செயல்பட தொடங்கியுள்ளது. இதில் லாரிகள் உள்ளே வரும் பாதை, வெளியே செல்லும் பாதை, குவாரி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கண்காணப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறையில் பதிவு செய்யப்பட்ட லாரிகளில் மட்டும் மணல் ஏற்றப்படும். மணல் ஏற்றப்பட்ட லாரி ஜி.பி.எஸ். கருவி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பொதுப்பணித்துறை குடோனில் இருந்து மணல் ஏற்றுவதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதுவரை 4 ஆயிரத்து 700 லாரிகளை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு சிவகங்கை அருகே காயாங்குளம் பொதுப்பணித்துறை குடோன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட உள்ளது.

குவாரி அலுவலகத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. குவாரியில் இருந்து வெளியே செல்லும் லாரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து கண்காணிக்க முடியும். குவாரியில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராவை சென்னையில் இருந்து இயக்கி கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் முறைகேடுகள் எதுவும் நடக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story