காமராஜரை விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து நாடார்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


காமராஜரை விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து நாடார்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Aug 2018 4:45 AM IST (Updated: 25 Aug 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

காமராஜரை விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூரில் அனைத்து நாடார்கள் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்,

காமராஜர் பற்றி ஆபாசமாக விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அனைத்து நாடார்கள் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் பேசும்போது, ‘‘காமராஜரை மிகவும் மோசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருபவர்களை கைது செய்யாமல் காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. காமராஜரை ஒரு குறிப்பிட்ட சாதி தலைவர் போல் சித்தரிக்கிறார்கள். அவர் தமிழகத்தின் முன்னாள் முதல்–அமைச்சர். பொதுவானவர். அவருடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களை தடுக்க வேண்டும்’’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் நாடார் பேரவை மாநில பொதுச்செயலாளர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகர் பேசும்போது, ‘‘தற்போதைய முதல்–அமைச்சரை பற்றி அவதூறு பரப்பினால் அவர்களை காவல்துறை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்கிறது. ஆனால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட முன்னாள் முதல்–அமைச்சர் காமராஜரை பற்றி ஆபாசமாக விமர்சனம் செய்தவர்களை கைது செய்யக்கோரி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளாமல் மெத்தனமாக உள்ளனர். இனியும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் தீவிரமடையும்’’ என்றார். தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் பேசும்போது, காமராஜர் பற்றி அவதூறாக பேசியவர்கள் மீது உடனடியாக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நாடார்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story