காலமுறை ஊதியம் வழங்கக்கோரி ஊட்டியில் அரசு டாக்டர்கள் பேரணி
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி ஊட்டியில் அரசு டாக்டர்கள் பேரணி சென்றனர்.
ஊட்டி,
அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு நீலகிரி மாவட்டம் சார்பில், மத்திய அரசுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணப்படிகளை உடனடியாக வழங்கக்கோரி ஊட்டியில் நேற்று கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட செயலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.
பேரணி ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தொடங்கி ஸ்டேட் வங்கி வழியாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை சென்றது. பேரணியில் நிர்வாகிகள் ராஜ்குமார், குருமூர்த்தி மற்றும் அரசு டாக்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் பணப்படிகளை வழங்கக்கோரி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தமிழக அரசு அமைத்த 7–ம் ஊதியக்குழுவிடம், இதுதொடர்பான கோரிக்கைகளை ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் அனைத்து அரசு டாக்டர்கள் சங்கத்திற்கான கூட்டமைப்பு கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் அரசின் ஒரு நபர் குழுவிடம் மேற்கண்ட கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தருவதற்கான எந்தவித அறிவிப்பும், உத்தரவாதமும் அரசு தரப்பில் இதுவரை வரவில்லை.
இதையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த கூட்டமைப்பு முடிவு செய்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்கள், மண்டல அளவில் உறுப்பினர்கள் கொள்கை விளக்க கூட்டங்கள் நடத்தப்பட்டதோடு, கோரிக்கை அட்டை அணிந்து அரசு டாக்டர்கள் பணிபுரிந்து வந்தனர். இன்று (நேற்று) கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி கவன ஈர்ப்பு பேரணி நடத்தப்பட்டு உள்ளது. அரசு டாக்டர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பணப்படிகளையும் உடனடியாக வழங்க வேண்டும். எங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.