பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை 29-ந்தேதி தொடக்கம்
பழனி முருகன் கோவிலில் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்ட ரோப்கார் சேவை வருகிற 29-ந்தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழனி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி விளங்குகிறது. பழனிக்கு வரும் பக்தர்களை விரைவாக மலைக்கோவிலுக்கு கொண்டு செல்வதில் முதலிடம் வகிப்பது ரோப்கார் சேவை ஆகும். இதனால் பக்தர்களின் முதல் தேர்வாக ரோப்கார் சேவை உள்ளது. இந்த நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை கடந்த மாதம் (ஜூலை) 12-ந்தேதி நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து ரோப்கார் நிலையத்தின் கீழ், மேல் தளங்களில் உள்ள உபகரணங்கள் கழற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்தது. அதையடுத்து ரோப்கார் பெட்டிகளுக்கு வர்ணம் பூசும் பணி மற்றும் புதிய கம்பிவடம் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு கம்பிவடத்துடன் ரோப்கார் பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. அது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதா? என கோவில் அதிகாரிகளிடம் கேட்ட போது, சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது. காலி பெட்டிகளாகவும், எடை வைத்தும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மேலும் ரோப்காரின் அனைத்து உபகரணங்களும் முறையாக செயல்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. வருகிற 29-ந்தேதி முதல் ரோப்கார் சேவையை பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றனர்.
Related Tags :
Next Story