‘சிறிய பட்ஜெட் படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைப்பதில்லை’
‘சிறிய பட்ஜெட் படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைப்பதில்லை‘ என்று இயக்குனர் லெனின்பாரதி உருக்கமாக கூறினார்.
தேனி,
தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் வாழும் நிலமற்ற உழைக்கும் மக்களை மையப்படுத்தி, அவர்களின் வாழ்வியலை சொல்லும் விதத்தில் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பில், தேனி மாவட்டம் கோம்பையை சேர்ந்த இயக்குனர் லெனின்பாரதி இயக்கி உள்ள இந்த படம் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் தொழில் முறை நடிகர்கள் ஓரிருவரை தவிர மற்றவர்கள் அனைவரும் கதைக்களம் அமைந்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும், புதிய நபர்களுமே ஆவர். படத்தில் நடித்துள்ள மக்களுடன் இயக்குனர் லெனின்பாரதி உள்ளிட்ட படக்குழுவினர் இந்த படத்தை இளையராஜா பிறந்த ஊரான பண்ணைப்புரத்தில் உள்ள தியேட்டரில் நேற்று பார்த்தனர்.
படம் முடிந்த பின்பு அங்கு உள்ள இளையராஜா பிறந்த வீட்டுக்கு படக்குழுவினர் சென்றனர். அந்த வீட்டின் முன்பு நின்று கொண்டு படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது படத்தில் நடித்த பொதுமக்களும், துணை நடிகர்களும் ஆனந்தக் கண்ணீருடன் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பரஸ்பரம் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது இயக்குனர் லெனின்பாரதிகூறியதாவது:-
சினிமா என்பது மிகப்பெரிய ஆயுதம். அது ஆபாசம், வக்கிரம் என்ற பெயரில் ரசனையை கெடுத்து வைத்து இருக்கிறது. பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவின் போது அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரபல நடிகர்கள் வந்த போது, ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி கோஷம் போடும் அளவுக்கு சினிமா அவர்களை கெடுத்து வைத்துள்ளது.
திரைக்கு வரும் முன்பே இந்த படம் 11 விருதுகளை பெற்று இருக்கிறது. ஆனால், தேசிய விருதுக்கு முதல் பரிந்துரையிலேயே நிராகரிக்கப்பட்டது. விருதுக்காக இந்த படத்தை நாங்கள் எடுக்கவில்லை. இது, எளிய மக்களுக்கான படம். அவர்களை போய் சேர வேண்டும். அதற் காக தான் படத்தை திரையிடும் முன்பு சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு படத்தை கொண்டு சென்றோம்.
படத்தை வெளியிடுவதற்கு பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியது இருந்தது. இந்த மண்ணின் கதையை சொல்லி இருக்கிறோம். ஆனால், இந்த மாவட்டத்தில் மொத்தம் 3 காட்சிகள் தான் திரையிடப்படுகிறது. மாவட்டத்தின் தலைநகரில் உள்ள தியேட்டர்களில் கூட படம் வெளியாகவில்லை. சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களை திரையிட தியேட்டர்கள் கிடைப்பது இல்லை. நல்ல படம் எடுக்க மாட்டார்களா? என்று ஒருபுறம் ஏக்கம் உள்ளது. போராடி எடுத்தால் அங்கீகாரம் கிடைப்பது இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story