அணைப்பட்டியில் மதுக்கடையை மூடக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்


அணைப்பட்டியில் மதுக்கடையை மூடக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Aug 2018 4:52 AM IST (Updated: 25 Aug 2018 4:52 AM IST)
t-max-icont-min-icon

அணைப்பட்டியில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலக்கோட்டை,

திண்டுக்கல் மாவட்டம் அணைப்பட்டியில், சித்தர்கள் நத்தம் செல்லும் சாலையில் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் தான் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. எனவே அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்களிடம், மதுபிரியர்கள் தகராறு செய்து வருகின்றனர்.

இதுதவிர அப்பகுதியை திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் தேவையில்லாத பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது. இந்த மதுக்கடையை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் நேற்று அணைப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களுடன், அப்பகுதி பொதுமக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கடையை மூடக்கோரி மாணவர்களும், பொதுமக்களும் கோஷங்களை எழுப்பினர். இந்த மறியல் போராட்டத் தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து 10 நாட்களில் மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்களும், பொதுமக்களும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. 

Next Story