கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 25 Aug 2018 4:53 AM IST (Updated: 25 Aug 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மைசூரு,

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் மற்றும் மலைநாடு என அழைக்கப்படும் சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதன்காரணமாக கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பின.

முக்கியமாக குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், மைசூருவில் உள்ள கபினி அணையும் கடந்த 2 மாதங்களில் 2 முறை முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக திறக்கப்பட்டது. இந்த நிலையில், இரு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்துள்ளதால், அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் வெகுவாக குறைந்தது.

நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 124.60 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 24,536 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 8,328 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் மழை பெய்யாததால், அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக, அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் பெருமளவுக்கு சரிந்துள்ளது.

இதேபோல, கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,282.64 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 16,803 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 16,250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

குடகு மற்றும் கேரளாவில் மழை குறைந்துள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதன்காரணமாக இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு 24,578 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. 

Next Story