ராசிபுரம் ஒன்றிய அலுவலகத்தில் அரசு விழா: ரூ.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்


ராசிபுரம் ஒன்றிய அலுவலகத்தில் அரசு விழா: ரூ.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 24 Aug 2018 11:25 PM GMT (Updated: 24 Aug 2018 11:25 PM GMT)

ராசிபுரத்தில் நடந்த அரசு விழாவில், ரூ.74¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.

ராசிபுரம்,

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விலையில்லா ஸ்கூட்டர் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் பர்கத் பேகம் வரவேற்றார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி. முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு 257 பயனாளிகளுக்கு ரூ.74 லட்சத்து 30 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்டங்களையும், சத்துணவு மையங்களுக்கு மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றையும் வழங்கினார்கள்.

விழாவில் அமைச்சர் பி.தங்கமணி பேசும் போது, ‘மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. இங்கே வீட்டுமனை பட்டா வாங்கியவர்களுக்கு அவர்கள் விரும்பினால் பசுமை வீடுகள் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

விழாவில் அமைச்சர் வெ.சரோஜா பேசும் போது,‘ மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அனைத்து திட்டங்களையும் முதல்-அமைச்சரும், துணை அமைச்சரும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். மக்களின் தேவைகளை வீடு தேடி சென்று நிறைவேற்றி வருகிறோம். ராசிபுரத்திற்கு தனியாக கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். அதற்கான பூர்வாங்க ஆய்வுகள் நடந்து வருகிறது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். ராசிபுரம் புறவழிச்சாலையின் 2-ம் கட்ட பணிகள் அணைப்பாளையம் முதல் பொன்குறிச்சி வரை செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் ரூ.25 கோடி மதிப்பில் 2-ம் கட்ட புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும். எனவே யாருக்கு வாக்கு அளித்தால் வீடு தேடி வந்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார்களோ அவர்களுக்கு வாக்கு அளியுங்கள்’ என்றார். முடிவில் தாசில்தார் சாகுல் அமீது நன்றி கூறினார்.

இதையடுத்து, ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட நெசவாளர் காலனியில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பொது சுகாதார வளாகத்தை அமைச்சர்கள் இருவரும் திறந்து வைத்தனர். அதே பகுதியில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் சமுதாயக் கூடம் கட்டுவதற்கும், ராசிபுரம் நகராட்சி அலுவலகம் அமைந்திருக்கும் பகுதியில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கும் அமைச்சர்கள் இருவரும் அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

விழாவில் ராசிபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் காளியப்பன், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் இ.கே.பொன்னுசாமி, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் துரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலர் ஜெகதீசன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாஸ்கர், ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் தனபால் மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்குறிச்சி ஆயிபாளையத்தில் தாய்திட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர்கள் பி.தங்கமணி மற்றும் வெ.சரோஜா ஆகியோர் திறந்து வைத்தனர்.

Next Story