குமாரபாளையம் நகரில் மக்கும் குப்பைகள் மூலம் 14 டன் உரம் தயாரிக்கப்படுகிறது


குமாரபாளையம் நகரில் மக்கும் குப்பைகள் மூலம் 14 டன் உரம் தயாரிக்கப்படுகிறது
x
தினத்தந்தி 25 Aug 2018 4:58 AM IST (Updated: 25 Aug 2018 4:58 AM IST)
t-max-icont-min-icon

குமாரபாளையம் நகரில் மக்கும் குப்பைகள் மூலம் நாள்தோறும் 14 டன் உரம் தயாரிக்கப்படுகிறது என்று நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி தெரிவித்தார்.

குமாரபாளையம்,

குமாரபாளையம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும், மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரித்து பெறப்பட்டு வருகிறது. இந்த நகரில் உள்ள 33 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு உருவாகும் மக்கும், மக்காத குப்பைகளின் அளவு 21.5 டன் ஆகும்.

இதில் மக்கும் குப்பைகள் 14 டன் மற்றும் மக்காத குப்பைகள் 7.5 டன் ஆகும். இந்த குப்பைகள் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தினசரி மற்றும் வாரச்சந்தை என நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தள்ளுவண்டிகள், பேட்டரி வண்டிகள், ஆட்டோ மற்றும் டிப்பர் லாரிகள் மூலம் நாள்தோறும் சேகரிக்கப்படுகிறது.

இதற்காக நகரின் அனைத்து வார்டுகளிலும், வீடு, வீடாக சென்று தள்ளுவண்டிகள் மூலம் துப்புரவு பணியாளர்களால் காலை 6 மணி முதல் 11 மணி வரை மக்கும், மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரித்து பெறப்பட்டு வருகிறது.

வணிக நிறுவனங்களில் உருவாகும் மக்கும் குப்பைகளை காலை 6 மணி முதல் 10 மணி வரை நகராட்சியின் டிப்பர் லாரி மூலம் சேகரிக்கப்பட்டும், வணிக நிறுவனங்களில் உருவாகும் மக்காத குப்பைகளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மற்றொரு டிப்பர் லாரி மூலம் சேகரிக்கப்படுகிறது.

மேலும் நகரின் அனைத்து தொழிற்கூடங்கள் மற்றும் விசைத்தறி கூடங்களில் இருந்து உருவாகும் பஞ்சு கழிவுகளை வாரம் இரு நாட்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நகராட்சி வாகனங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை பார்வையிட்ட நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து கூறியதாவது:-

குமாரபாளையம் நகரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை சேகரித்து உரம் தயாரிக்க இந்த நகராட்சிக்கென உரக்கிடங்கு இடம் எதுவும் இல்லாத காரணத்தினால் வீடுகளில் உருவாகக்கூடிய மக்கும் குப்பைகளை பொதுமக்களின் ஒத்துழைப்புடனும், ஆதரவுடனும் தற்போது புதிதாக செயல்படுத்தி வரும் பேரல் முறை மூலம் 8 டன் மக்கும் குப்பைகள் உரமாக்கப்படுகின்றன.

வணிக நிறுவனங்கள், தினசரி மற்றும் வாரச்சந்தையில் இருந்து உருவாகும் 6 டன் மக்கும் குப்பைகளை நகராட்சிக்கு அருகில் உள்ள புளியம்பட்டியில் தனியார் நில உரிமையாளரின் ஒப்புதல் பெற்று விண்ட்ரோஸ் முறையில் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நகராட்சி சார்பில் நாள்தோறும் 14 டன் உரம் தயாரிக்கப்படுகிறது.

மக்காத குப்பைகளான, பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வாரம் ஒரு முறை சங்ககிரியில் உள்ள சிமெண்டு ஆலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் குமாரபாளையம் நகரில் உள்ள தொழிற்கூடங்கள், விசைத்தறி கூடங்களில் இருந்து உற்பத்தியாகும் 2 டன் வீணான துணிப்பஞ்சு கழிவுகளை வாரம் இருமுறை நகராட்சி லாரி மூலம் சேகரித்து பள்ளிபாளையத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு எரிபொருள் பயன்பாட்டிற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story