சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்


சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2018 10:00 PM GMT (Updated: 25 Aug 2018 12:06 AM GMT)

பண்ருட்டி ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. இதில் வீடுகளை இழந்தவர்கள் கடலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 


பண்ருட்டியில் அமைந்துள்ளது செட்டிபட்டறை ஏரி. சுமார் 1,030 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி மூலம் மாளிகை மேடு, எல்லன்புரம், பண்ருட்டி, திருவதிகை, எஸ்.ஏரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.

இந்த ஏரியை பலர் ஆக்கிரமிப்பு செய்து, விவசாய நிலங்களாக மாற்றிவிட்டனர். அதாவது பம்பு செட்டுகள் அமைத்து நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். அதோடு ஏரி பகுதியில் ஏராளமானவர்கள் வீடுகளை கட்டியும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், ஐகோர்ட்டு உத்தரவு படி, ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நேற்று 5-வது நாளாக நடந்தது. இதில், ஏரியின் உள்ளே பயிர் செய்யப்பட்டு இருந்த நெல் உள்ளிட்ட பயிர்களை பொக்லைன் எந்திரம் கொண்டு அழிக்கும் பணியில் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.


இதற்கிடையே, ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்ததாக 138 வீடுகள், இடித்து அகற்றப்பட்டது. இதனால் வீடுகளை இழந்தவர்கள், நேற்று ஒன்று திரண்டு பண்ருட்டி சாமியார்தர்கா அருகே கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் ஆறுமுகம், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தற்போது மழை பெய்து வரும் நிலையில், நாங்கள் வீடுகளை இழந்து உள்ளோம், எனவே நாங்கள் தங்குவதற்கு முகாம் ஏற்பாடு செய்து தர வேண்டும், நிவாரண உதவியும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அனைவரும் தங்குவதற்கு திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்து தருவதாகவும், மேலும், மாற்று இடம் வழங்கும் வகையில் காடாம்புலியூர்சமத்துவபுரம் அருகே இடம் தயார் செய்யப்பட்டு வரப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே மாலை 4 மணிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் உத்திராபதி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவன், கடலூர் நகர செயலாளர் அமர்நாத் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கடலூர் சப்-கலெக்டர் சரயூ வை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வந்தனர். அப்போது அவர், அலுவலகத்தில் இல்லாததால் சப்-கலெக்டர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, வீடுகளை இழந்த அனைவருக்கும் உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும், தற்போது அனைவரும் தங்குவதற்கு முகாம்களை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் தொடர்ந்து அவர்கள் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மாலை 6 மணிக்கு மேல் சப்-கலெக்டர் சரயூ அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோரிக்கைகள் கேட்டறிந்த அவர், இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனுவை சப்-கலெக்டரிடம் அளித்துவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story