வெடிபொருட்களைக் கண்டறிய உதவும் கீரிப்பிள்ளைகள்!
பொதுவாக வெடிபொருட்களைக் கண்டறிய அதிநவீன சாதனங்களும், பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால் இப்பணிக்கு கீரிப்பிள்ளைகளைப் பயன்படுத்தும் திட்டத்தை இலங்கை ராணுவம் மேற்கொண்டிருக்கிறது.
கொழும்பு மத்தேகொட ராணுவ முகாமில் கீரிப்பிள்ளைகளுக்கு இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இலங்கை ராணுவத்தின் பொறியியல் பிரிவு இந்தத் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
வெடிபொருட்களைக் கண்டறிய இதற்கு முன்பு மோப்ப நாய்களே பயன்படுத்தப்பட்டன. தற்போது விலங்கினத்தில் அதிக மோப்ப சக்தி கொண்ட கீரிப்பிள்ளையைப் பயிற்றுவிக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என இலங்கை ராணுவம் கூறுகிறது.
‘வெடிபொருட்களைக் கண்டறிய நாய்களை இதுவரை பயன்படுத்தி வந்தோம். வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் இந்த நாய்களுக்கு அதிக செலவாகிறது. இதைத் தவிர அதிநவீன கருவிகள் பயன்படுகின்றன. இந்தக் கருவிகளின் விலையும் அதிகமாக உள்ளது. எனவே இதற்கு மாற்று வழியைக் கண்டறியும் தேவை இருந்தது. நாய்களுக்குப் பதிலாக கீரிப்பிள்ளையைப் பயன்படுத்த முடியுமா என்பதை ஆராய்ந்தோம். அதில் தற்போது வெற்றியும் கண்டுள்ளோம். பொதுவாக நாய்களை விடவும் கீரிக்கு மோப்ப சக்தி அதிமாக இருக்கிறது. இதனால் வெடிபொருட்களை தேடிப்பிடிப்பதில் கீரி சிறப்பாக செயல்படுகிறது' என ராணுவ வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
நாய்கள் இயல்பாகவே தரையில் உள்ள வெடிபொருட்களைக் கண்டுபிடிப்பதில் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் கீரிப்பிள்ளைகள் தரைக்குக் கீழும், தரையில் இருந்து சுமார் 4 அடி உயரத்திலும் உள்ள வெடிபொருட்களைக் கண்டறிவதில் நாய்களைவிட சிறப்பாகச் செயல்படுகின்றன.
கீரிப்பிள்ளையைப் பயன்படுத்தும் இந்த முயற்சி, இதற்கு முன்பு கம்போடியாவில் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
ஆனால் அந்த முயற்சி சரியாக செயல்படுத்தப்பட்டதாகவோ, வெற்றி பெற்றதாகவோ எவ்விதத் தகவலும் இல்லை. ஆனால், வெடிபொருட்களைக் கண்டறிய கீரிப்பிள்ளையைப் பயன்படுத்தும் செயல்திட்டம் இலங்கையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இலங்கையில் பொன்னிறம், சிவப்பு மற்றும் சாம்பல் என மூன்று நிறங்களில் மூன்று வகை கீரிப்பிள்ளைகள் இருக்கின்றன. இவற்றில் சாம்பல் நிற கீரிகளுக்கே அதிக மோப்ப சக்தி இருப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பொதுவாக ஈர நிலப் பகுதியில் சிவப்பு நிற கீரிப் பிள்ளைகளும், வறண்ட நிலப் பகுதியில் சாம்பல் நிற கீரிப்பிள்ளைகளும் காணப்படுகின்றன.
சிவப்பு, சாம்பல் நிறத்திலான இரண்டு வகை கீரிகளும் இலங்கை ராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுக்குத் தனியான பெயர்களும், ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற எண்களும் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை ராணுவத்தில் தற்போது 9 கீரிப்பிள்ளைகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றில் ஏழு கீரிப் பிள்ளைகளை இந்தத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இரண்டு கீரிப் பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
வெடிபொருட்களைக் கண்டறிவதற்கு முன்பு, ஆறு மாதங்களுக்கு கீரிப்பிள்ளையை பயிற்சியாளர் தன்னுடன் பழக்கப்படுத்துகிறார். ஆறு மாதங்களுக்குப் பின்பு பயிற்சியாளருடன் கீரிப்பிள்ளை இணங்கிச் செயல்பட ஆரம்பிக்கிறது. அடுத்த ஆறு மாத காலத்துக்கு, அதற்கு கட்டளைகளுக்கு கீழ்ப்படியவும், வெடிபொருட்களைக் கண்டறியவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. முழுமையாக ஒரு கீரிப்பிள்ளையைப் பயிற்றுவிக்க ஒரு வருடம் தேவைப்படுகிறது.
காட்டில் இருந்து நேரடியாக பிடித்துவரப்பட்ட கீரிப்பிள்ளை என்பதால் ஒரு வருடம் செல்கிறது. எனினும், குட்டியில் இருந்து பயிற்சி அளித்தால் இதை 80 சதவீதம் இலகுவாகச் செய்ய முடியும். எதிர்காலத்தில், போதைப்பொருட்களைக் கண்டறியவும் கீரிப்பிள்ளைகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக கீரிகளுக்கு பயிற்சி அளிக்கும் குழுவின் தலைமை அதிகாரி கூறுகிறார்.
ஆரம்பத்தில், வெடிபொருளைத் தோண்டி எடுக்கும் வகையில்தான் கீரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால், வெடிபொருட்களை எடுக்கும்போது வெடிபொருளின் தாக்கத்துக்கு கீரிப்பிள்ளைகள் உள்ளாவதால் அந்த நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, தற்போது வெடிபொருள் இருக்கும் இடத்தை மட்டும் கண்டறிவதற்கு கீரிப்பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வெடிபொருளைக் கண்டறிந்த பின்னர், அந்த இடத்தில் கீரிப்பிள்ளை அமர்ந்துகொள்கிறது. பயிற்சியாளர் அதைப் புரிந்துகொண்டு, வெடிபொருளை மீட்கிறார்.
பாம்புடன் மோதும் கீரி, தற்போது மனிதர்களுக்கு உதவுகிறது!
Related Tags :
Next Story