ஒரே குடும்பத்தில் இந்தியரும் பாகிஸ்தானியரும்!
இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல முரண்பாடுகள், சச்சரவுகள் இருப்பதைப் போல பல ஒற்றுமைகள், விசித்திரங்களும் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இந்தியர்களாகவும், சிலர் பாகிஸ்தானியர்களாகவும் இருப்பது.
வியப்பாக இருக்கிறதா? தொடர்ந்து படியுங்கள்...
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையின்போது, எல்லைகளின் அருகே இருந்த பல பகுதிகளுக்கு இரு நாடுகளும் உரிமை கொண்டாடின, மோதிக் கொண்டன. அதுபோன்ற இடங்களில் ஒன்றுதான், ஜம்மு-காஷ்மீரின் லே மாவட்டத்தில் இருக்கும் ‘துர்துக்’ கிராமம்.
இந்தியா இரு நாடுகளாகப் பிரிந்தபோது இக்கிராமம் பாகிஸ்தான் வசம் சென்றது.
இரு நாடுகளின் எல்லைகளுக்கு நடுவில் இருந்த துர்துக் கிராமத்துக்கு வெளியாட்கள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டு, வெளியுலகத் தொடர்புகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 1971-ல் இரு நாடுகளுக்கும் இடையிலான போரின்போது, துர்துக் இந்தியாவுடன் இணைந்தது.
இந்தப் பகுதி கரடுமுரடான சாலைகளையும், மண் நிறைந்த மலைகளையும் பாலைவனங்களையும் கொண்டுள்ளதால் இங்கு செல்வதே கடினமானது.
பல்டிஸ்தான் பிராந்தியத்தைச் சேர்ந்தது இக்கிராமம். ஜம்மு-காஷ்மீரில் புதிய எல்லைகள் உருவாகும் முன்பு பல்டிஸ்தான் தனி நாடாக இருந்தது.
எட்டாம் நூற்றாண்டு முதல் பதினாறாம் நூற்றாண்டு வரையிலான துர்கிஸ்தானின் யாக்பூ வம்சத்தின் ஆட்சியில் இப்பகுதியில் கலை, இலக்கியத்துக்கு சிறப்பான ஊக்கம் அளிக்கப்பட்டது. இப்போதும் துர்துக் கிராமத்தில் பழம்பெருமை வாய்ந்த கட்டிடங்களின் எச்சங்களைக் காணலாம். யாக்பூ வம்சாவளியினர் இன்னும் துர்துக்கை தங்கள் தாயகமாகக் கருதுகின்றனர்.
இரு நாடுகளுக்கு இடையில் சிக்கி, வெளியுலகத்தினர் உள்ளே வர முடியாத நிலையில் இருந்த துர்துக் கிராமத்தின் மக்கள் பல ஆண்டுகளாக பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர்.
பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும், துர்துக்கில் கொட்டிக் கிடக்கும் இயற்கை அழகு மனதை மயக்குகிறது. விண்ணை முட்டும் காரகோர மலைகள் சூழ்ந்த இந்தக் கிராமத்தில் இருந்து எங்கு பார்த்தாலும் பசுமை போர்த்திய மலைகள் கண்களைக் குளிர்விக்கின்றன.
ஒரு காலத்தில் சீனா, பெர்சியா, ரோம் மற்றும் இந்தியா வழியிலான பண்டைய வர்த்தக வழியான சீன பட்டுப்பாதையின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது இந்தப் பகுதி.
தற்போது அதிகாரப்பூர்வமாய் இந்தியப் பகுதியாக இருக்கும் துர்துக்கின் மிக அருகில் பாகிஸ்தான் பகுதி உள்ளது.
இக்கிராமம் லடாக் பவுத்த மதத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இங்கு முஸ்லிம்களே அதிகம். திபெத்திய பவுத்த மதத்தினரின் ஆழமான தாக்கம் கொண்ட இந்த மக்கள், திபெத் மற்றும் இந்திய- ஆரிய வம்சாவளியினர் என்று நம்பப்படுகிறது. பால்டி மொழி பேசும் இவர்களின் உணவு, கலாசாரம் எல்லாமே தனித்துவமானவை.
துர்துக் எல்லைப் பிரச்சினைகளில் சிக்கித் தவித்ததால் வளர்ச்சி குன்றிக் காணப்படுகிறது. சுமார் 300 வீடுகள் உள்ள இக்கிராமத்தில் சாலை போன்ற அடிப்படை வசதிகளோ, வேறு உள்கட்டமைப்பு வசதிகளோ குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. இந்தியாவுடன் இணைந்தபிறகு சாலைகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை கட்டப்பட்டாலும் அவை போதுமானதாக இல்லை.
ஆனால் எந்தக் குறைபாட்டையும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்களாக இக்கிராம மக்கள் உள்ளனர்.
எளிமையான வாழ்க்கை வாழும் இம்மக்கள், இயன்ற, சிறிய அளவிலான தொழில்கள் செய்து, கிடைப்பதை வைத்து வாழ்கின்றனர். மின்சார வசதி பெயரளவிலேயே உள்ளது. சீன பட்டுச்சாலை காலத்தில் ‘மரண நதி’ என்று அழைக்கப்பட்ட ‘ஷ்யோக் நதி’ துர்துக் அருகே ஓடுகிறது. இம்மக்கள், விவசாயத்தில் பிரதானமாக பார்லியை விளைவிக்கின்றனர்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் இருந்து துர்துக் கிராமத்துக்கு வந்த அப்துல் கரீம் ஹஷ்மத், இங்குள்ள ஆரம்பப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவர்தான் இங்கு முதன்முதலில் ஒரு சிறு தங்கும் விடுதியைத் திறந்தார்.
துர்துக் கிராம மக்கள் ஆரம்பத்தில் இந்தியாவுடன் இணைய அச்சப்பட்டதாக கரீம் ஹஷ்மத் கூறுகிறார். ஆனால் 1971-ல் நடைபெற்ற போரின்போது இங்கு வந்த இந்தியப்படைகள் ஆதரவும், ஆறுதலும் அளித்ததாக அவர் கூறுகிறார். துர்துக் கிராமத்தின் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த கர்னல் ரின்சென்னின் வார்த்தைகளும் அவர்களுக்கு நம்பிக்கை அளித்தது. ரின்சென் கூறிய ஆலோசனையின் அடிப்படையிலேயே இந்தியாவுடன் இணைவதற்கு துர்துக் மக்கள் இசைந்தனர். ஆடல், பாடலுடன் மகிழ்ச்சியோடு இந்திய ராணுவத்தை வரவேற்றனர்.
1971 போருக்கு முன் துர்துக் கிராமவாசிகளில் பலர் அருகிலுள்ள பாகிஸ்தானிய நகரங்களில் வேலை செய்து கொண்டிருந்தனர், தொழில் செய்தனர். இளைஞர்கள் படித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இந்தியாவுடன் துர்துக் இணைந்த பிறகு, அங்கிருந்தவர்கள் பாகிஸ்தானிலேயே தங்க நேர்ந்தது.
எனவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இந்தியராகவும், சிலர் பாகிஸ்தானியராகவும் இருக்கும் விந்தை நிலை துர்துக்கில் நிலவுகிறது.
இதுபோன்ற குடும்பங்களுக்கான விசா நடைமுறையை இந்திய அரசு எளிதாக்கியிருக்கிறது. இங்கிருப்பவர்கள் சுலபமாக விசா பெற்று பாகிஸ்தானில் உள்ள உறவினர்களைப் பார்த்து வரலாம். ஆனால், இதற்கு பணம் செலவாகும். ஆவணங்களும் அதிகம் தேவைப்படும்.
எனவே இவர்களுக்கு, சில மணி நேரப் பயணத்தில் சென்றுவிடக்கூடிய தொலைவில் இருக்கும் தங்கள் ரத்த சொந்தங்களைச் சந்திக்க முடியாத சோக நிலை.
இந்தியாவின் இந்தக் கடைக்கோடி கிராம மக்களின் கவலைகள் தீரட்டும்!
Related Tags :
Next Story