செல்போனில் மூழ்கும் பெற்றோரால் விளையும் விபரீதம்!
பொது நீச்சல்குளங்களில் செல்போனில் மூழ்கும் பெற்றோரால் அவர்களின் குழந்தைகள் நீரில் மூழ்கும் விபரீதம் நிகழ்வதாகத் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும் ஜெர்மனியில் 300 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜெர்மனி உயிர் மீட்புக் குழுவினர், இத்தகைய மரணங்களில் பெரும்பாலானவை பெற்றோர்கள் தமது செல்போன்களில் மூழ்குவதால் நடப்பதாகக் கூறுகின்றனர். அத்தகைய தருணங்களில், கவனிப்பாரற்று இருக்கும் குழந்தைகள் நீரில் மூழ்கி மரணமடையும் சோகம் நேர்கிறது எனத் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகளோடு நீச்சல்குளத்துக்கு வந்தால், உங்கள் செல்போன்களை தூர வீசிவிடுங்கள் என பெற்றோர்களுக்கு கண்டன அறிவுரையை அந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.
கடந்த காலங்களில் குழந்தைகளோடு பெற்றோர் நீச்சல்குளத்துக்கு வந்தால், அவர்களோடு ஒருவராய்க் கலந்து உல்லாசமாய்க் கழிப்பார்கள். ஆனால், இன்று அந்நிலை மாறியிருக்கிறது. குழந்தைகளை நீரில் இறக்கிவிட்டு பெற்றோர் செல்போனில் ஆழ்ந்து விடுகின்றனர்.
ஜெர்மனியில் சமீபத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களில் குழந்தைகள் உட்பட 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 20 பேர் என்றும், 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 40 பேர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலும் இந்த மரணங்கள், நீச்சல் பயிற்சிகளின்போது நிகழ்ந்துள்ளன என்பது ஓர் அதிர்ச்சியான செய்தி.
நம்மூரிலும் பொது இடங்களில் தங்கள் குழந்தைகளை மறந்து செல்போனில் மூழ்கிவிடும் பெற்றோரைக் காண முடிகிறது.
அவர்கள் எல்லோருக்கும் இந்த எச்சரிக்கைச் செய்தி உறைக்குமா?
Related Tags :
Next Story