நெல்லையில் நாளை கருணாநிதி நினைவேந்தல் கூட்டம்
நெல்லையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது.
நெல்லை,
நெல்லையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கருணாநிதி நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது.
கருணாநிதி இரங்கல் கூட்டம்
தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 7-ந்தேதி மரணம் அடைந்தார். இதையொட்டி தி.மு.க. சார்பில் நெல்லை பாளையங்கோட்டையில் கோர்ட்டு எதிரே உள்ள மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கருணாநிதி நினைவேந்தல் பொது கூட்டம் நடைபெறுகிறது. “கலைஞரின் புகழுக்கு வணக்கம், அரசியல் ஆளுமை கலைஞர்” என்ற தலைப்பில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்மன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மற்றும் தொல்.திருமாவளவன், ஜி.கே.வாசன், அப்துல் சமது உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
புகழ் அஞ்சலி
இதையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள மைதானத்தில் மேடை மற்றும் தொண்டர்கள் அமருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த ஏற்பாடுகளை தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நெல்லை பாளையங்கோட்டையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடி அஞ்சலி செலுத்த உள்ளனர். இதில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் புகழ் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்றார்.
அப்போது நெல்லை மாவட்ட செயலாளர்கள் அப்துல் வகாப் (மத்திய மாவட்டம்), ஆவுடையப்பன் (கிழக்கு), சிவபத்மநாதன் (மேற்கு), எம்.எல்.ஏ.க்கள் மைதீன்கான், லெட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு, தணிக்கை குழு உறுப்பினர் சுப.சீதாராமன், பொருளாளர் ஞானதிரவியம், முன்னாள் கவுன்சிலர் ராஜகுமாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story