இளமையில் வெல் : திட்டமே தெளிவு தரும்!
வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக நாம் கருதும் பலரும் இளம் வயதிலேயே தாங்கள் செல்ல விரும்பும் இடத்துக்குத் திட்டமிட்டவர்கள்.
விமானம் ஓட்டும் பைலட் முன்னதாகவே ஒரு விமானப் பயணத் திட்டம் தயாரிக்க வேண்டும். அதை விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே விமானத்தை இயக்க அனுமதிப்பார்கள். அதற்குப் பெயர் ‘பிளைட் பிளான்’ (Flight plan). அந்த விமானப் பயணத் திட்டத்தில் கீழ்க்கண்டவை இருக்கும்...
1. விமானத்தின் எரிபொருள் அளவு.
2. விமானம் புறப்படும் நேரம்.
3. விமானம் பறக்கவேண்டிய உயரம்.
4. போக வேண்டிய தூரம்.
5. விமானம் கடந்து செல்லவேண்டிய பாதை.
6. விமானத்தின் வேகம்.
7. விமானம் தரையிறங்க வேண்டிய நேரம்.
இந்தத் திட்டத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் விமானி தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். தவறினால் விமானம் விபத்தைச் சந்திக்க நேரிடும்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஒரு விமானி, தனது விமானத்தை நகர்த்தும்போது, இந்த விவரங்கள் அனைத்தும் அவரிடம் இல்லை என்றால் என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்!
போதுமான எரிபொருள் இல்லை என்றால் நடுவானில் பறக்கும் விமானம் கீழே விழுந்து நொறுங்கிவிடும் அல்லவா?
கல்லூரியில் சேரும் நாளன்று, நீங்கள் உங்களது இலக்கு எதுவென்று யோசித்தீர்களா?
வாழ்வில் நாம் எங்கே போக வேண்டும்? எப்படிப் போக வேண்டும்? அதுவும் எப்போது போய்ச் சேர வேண்டும் என்று கணக்குப் போட்டிருக்கிறீர்களா?
அதைச் செய்யவில்லை என்றால் உடனே செய்துவிடுங்கள்.
நாம் எங்கிருந்து வருகிறோம் என்பது பெரிதல்ல. எங்கே செல்கிறோம் என்பதுதான் பெரிது.
மனிதன் நிலவில் கால் பதித்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் நடந்தபோது நீல் ஆம்ஸ்டிராங், ‘மனிதனின் ஒரு சிறு அடி, மனிதகுலத்தின் பெருந்தாவல்’ (‘One small step of man, giant leap for mankind ') என்று கூறினார்.
நிலவில் இருந்து பூமியைப் பார்த்த நிகழ்வில் நெகிழ்ந்து, ‘அழகிய காட்சி, அற்புத தனிமை’ (‘Beautiful view, magnificent desolation') என்றார்.
அமெரிக்கர்களுக்கு மட்டுமின்றி, பூமிவாழ் மனிதர்கள் அனைவருக்குமே பெருமைதந்த நிலாப் பயணம், ஓரிரு நாட்களில், மாதங்களில் அல்லது ஆண்டுகளில் நடந்துவிடவில்லை.
அதை 1961-ம் ஆண்டு தமது தேசத்தின் லட்சியமாகப் பறைசாற்றியிருந்தார், அதிபர் ஜான் எப். கென்னடி.
‘‘இந்தப் பத்தாண்டுகளுக்குள், நிலவுக்கு மனிதரை அனுப்பி, அவரை பத்திரமாக திரும்பச் செய்யும் குறிக்கோளை நாம் சாதித்துக் காட்ட வேண்டும்.’’
இதுதான் விமானத் திட்டம். கென்னடி அறைகூவல் விடுத்தது 1961-ம் ஆண்டில். நிஜத்தில் நிலவில் மனிதர்கள் காலடி பதித்தது 1969-ம் ஆண்டில்.
அவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்துவதற்கு, வல்லரசான அமெரிக்காவுக்கே 8 ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது.
நிலவில் காலடி பதிப்பதை தம் தேசத்தின் லட்சியமாக முழங்கிய கென்னடி, அச்சாதனை நிகழ்த்தப்பட்டபோது உயிருடன் இல்லை.
ஓர் அறிவியல் அறிஞராக வேண்டும், நாசா, இஸ்ரோ போன்ற பெரிய ஆராய்ச்சிக் கழகங்களில் சேர வேண்டும், ஒரு நரம்பியல் நிபுணராக வேண்டும், ஒரு சர்வதேச நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக வர வேண்டும் என்றால், நீங்கள் இன்றே அதற்கான வரைவுத்திட்டத்தை உருவாக்க வேண்டும். அத்துடன், ஒரு கால அட்டவணையையும் தீட்டிக்கொள்ள வேண்டும்.
பத்தாம் வகுப்பு படிக்கும்போதே உங்கள் திட்டம் உறுதியாகிவிட வேண்டும். இல்லை என்றால் உங்கள் மனம் அலைமோதும். சிந்தையில் சஞ்சலம் குடிகொள்ளும்.
அந்தப் படிப்பா? இந்தப் படிப்பா? உள்ளூரில் படிப்பதா? வெளியூரில் படிப்பதா? இளநிலைப் பட்டப் படிப்பை முடித்ததும், மேற்படிப்புப் படிப்பதா? வேலைக்குச் செல்வதா? என்று குழப்பங்கள் மனதில் கும்மியடிக்கும்.
சரி, திட்டமிட்டுச் செயல்படுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
எந்த வேலை முக்கியமோ, அதில் மட்டும் கவனம் செலுத்த முடியும்.
குறுகிய காலத்தில் அதிக வேலைகளைச் செய்துவிடலாம்.
செய்யும் வேலைகளை சிறப்பாகச் செய்யலாம்.
கட்டுப்பாடு உள்ளவராக வாழலாம்.
நேரத்தை வீணடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
தேவையில்லாத நபர்களுடன் சேராமல் தவிர்க்கலாம்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நம்மிடம் பெரிய பொருளாதார பலம் இல்லை. மக்களோ 30 கோடிப் பேர் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் நல்வாழ்வுக்கு அரசின் கரங்களை எதிர்நோக்கி இருந்தனர்.
முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அதை உணர்ந்தார். ஐந்தாண்டுத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதன் விளைவாக, பெரும் அணைகள் கட்டப்பட்டன, கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன, தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன.
அந்தத் தொழிற்சாலைகள்தான் நவீன இந்தியாவின் கோவில்கள் என்றார் நேரு.
இந்தியா உருவாக்கிய சிறந்த தலைவர்களில் ஒருவர், நேரு. ஒப்பற்ற விடுதலை வீரரான அவர், தீவிர சிந்தனையாளர், சிறந்த எழுத்தாளர், தேசபக்தியாளர்.
இங்கிலாந்தின் ஹாரோ பள்ளியில் படித்தவர், கேம்பிரிட்ஜ் கல்லூரியில் சட்டம் பயின்றவர்.
அம்மாமனிதருக்கு திட்டமிடுதலின் அவசியம் தெரிந்திருந்தது. அதை நீங்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
‘கண்டுணர்ந்த இந்தியா’, ‘உலக வரலாற்றுத் துளிகள்’, ‘விடுதலையை நோக்கி’, ‘ஒரு சுயசரிதை’, ‘ஒரு தந்தை மகளுக்கு எழுதிய கடிதங்கள்’ ஆகியவை நேரு படைத்த புகழ்பெற்ற நூல்கள்.
இளைஞர்களாகிய நீங்கள் இதுபோன்ற நூல்களைப் படிக்க வேண்டும். அப்போது உங்களின் சிந்தனை தெளிவும் உயர்வும் அடையும்.
பொதுவாக, திட்டமிடத் தவறும்போது, கீழ்க்கண்ட விளைவு கள் ஏற்படும்...
உங்களின் இலக்கு என்ன என்பது உங்களுக்கே தெரியாமல் போய்விடும்.
நீங்கள் விரும்பும் வேலை அல்லது பதவி எப்படிப்பட்டது என்றுகூட சரியாகத் தெரியாமல் அந்த இடத்துக்குப் போக முயற்சிப்பீர்கள்.
உங்களது இலக்கை அடையத் தேவைப்படும் முயற்சியின் அளவை உணராது இருப்பீர்கள்.
உங்களின் தற்போதைய ஆற்றல் என்ன, தேவை என்ன, குறைபாடு என்ன என்பதை அளவிட இயலாது.
உங்களது போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணற நேரிடும்.
போட்டியில் வெற்றியை எட்டுவது சிரமமாகிவிடும்.
வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடும்.
வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக நாம் கருதும் பலரும் இளம் வயதிலேயே தாங்கள் செல்ல விரும்பும் இடத்துக்குத் திட்டமிட்டவர்கள்.
அவர்களிடம் ஒரு ‘விமானப் பயணத் திட்டம்’ இருந்தது.
நீங்களும் ஒரு விமானப் பயணத் திட்டத்தை உருவாக்கத் தொடங்குங்கள்- உடனே... இப்போதே... இந்த நொடியே!
-முனைவர் செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்.
Related Tags :
Next Story