தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Aug 2018 3:30 AM IST (Updated: 25 Aug 2018 4:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

மாசில்லா தமிழ்நாடு 

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் தூத்துக்குடி ரோச் பூங்கா பகுதியில் நடந்தது. இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு திட்டம் மற்றும் சுமார் 1,000 பேர் பங்கேற்ற விழிப்புணர்வு மனித சங்கிலியை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் தூய்மை பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது;–

தமிழக முதல்–அமைச்சர் நடைபெற்ற சட்டமன்ற பேரவையில் 110 விதியின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ள உத்தரவிட்டார். அதனடிப்படையில், நமது மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகள், 1,671 கிராம ஊராட்சிகள், 19 பேரூராட்சிகள், 2 நகராட்சிகள், 1 மாநகராட்சியில் உள்ள மக்களுக்கு பிளாஸ்டிக் தீமைகள் குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழிப்புணர்வு 

மேலும், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், அதிநவீன மின்னனு வாகனத்தின் மூலம் குறும்படங்கள் திரையிடப்பட்டு பொது மக்களிடம் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்கங்கள், உள்ளூர் தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது மற்றும் அவற்றின் தீமைகள் குறித்து குறும்படம் ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை பஸ்களில் ஒட்டி விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், போலீஸ் நிலையங்கள், நகர்புற மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அனைத்து பள்ளி வாகனங்களிலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நமது மாவட்டத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக அறிவித்து பெருமை சேர்த்திட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, மாநகராட்சி ஆணையாளர் அல்பி ஜான் வர்க்கீஸ், உதவி கலெக்டர் பிரசாந்த், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜகோபால், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதா ராணி மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகி என்.சின்னத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story