மாடுகளுக்கு கால்–வாய் நோய் தடுப்பூசி போடும் பணி 1–ந்தேதி தொடங்குகிறது
தூத்துக்குடி மாவட்டத்தில் மாடுகளுக்கு இலவசமாக கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடும் பணி வருகிற 1–ந்தேதி தொடங்குகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் மாடுகளுக்கு இலவசமாக கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடும் பணி வருகிற 1–ந்தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
தடுப்பூசி
தூத்துக்குடி மாவட்டத்தில் கால் மற்றும் வாய் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு மேற்பட்ட அனைத்து மாடுகளுக்கும் இலவசமாக கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போடும் பணி வருகிற 1.9.2018 முதல் 21.9.2018 வரை கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.
கால் மற்றும் வாய் நோய் வைரஸ் என்னும் நச்சு கிருமியால் ஏற்படுகிறது. நோய் பாதித்த கால்நடைகளில் வாய் மற்றும் கால் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டு அதிக காய்ச்சலுடன் காணப்படும். இந்த நோய் பாதித்த கறவை மாடுகளில் பால் உற்பத்தி பெரிதும் குறைவதால், பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த நோய் முற்றிலும் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம்.
31 குழுக்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை உதவி மருத்துவர்கள் தலைமையில் 31 குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் 6 மாதத்திற்கு ஒரு முறை தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறவுள்ள கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி திட்ட பணியில் தவறாது அனைத்து மாடுகளுக்கும் கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி போட்டு பயனடையுமாறு கால்நடை வளர்ப்போர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story