இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்


இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்
x
தினத்தந்தி 26 Aug 2018 4:00 AM IST (Updated: 25 Aug 2018 10:03 PM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் கூறினார்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜெயங்கொண்டத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் ஊர்காவல்படை வட்டார தளபதி ராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் பிரேமா வரவேற்று பேசினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமார் கலந்து கொண்டு பேசும்போது, விபத்துகளில் உயிரிழப்புகளை தவிர்க்க இருசக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் அவசியம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். ஹெல்மெட் போடுவது மட்டுமின்றி, அதன் கொக்கியும் அவசியம் போட வேண்டும். அதிக வேகத்தில் செல்லக்கூடாது. மது அருந்தி வாகனங்களை ஓட்டக்கூடாது. மேலும் நான்கு சக்கர வாகனத்தில் வாகன ஓட்டிகளுடன் பயணிகளும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். அதிக பாரங்களை சரக்கு வாகனங்கள், லாரிகளில் ஏற்றி செல்லக்கூடாது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது என்று கூறினார். மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேசினார்.

நிகழ்சியில் போலீசார்கள், தீயணைப்பு துறையினர், ஊர்காவல்படையினர், பொதுமக்கள், நகராட்சி ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ஆகியோருக்கு ஹெல்மெட் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலதிபர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜேஷ்குமார் நன்றி கூறினார்.

Next Story