வீடியோ எடுத்ததால் ஆத்திரம் போலீஸ்காரரின் செல்போனை உடைத்த வியாபாரி கைது


வீடியோ எடுத்ததால் ஆத்திரம் போலீஸ்காரரின் செல்போனை உடைத்த வியாபாரி கைது
x
தினத்தந்தி 26 Aug 2018 3:15 AM IST (Updated: 26 Aug 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

கிழக்கு கடற்கரை சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை வீடியோ எடுத்ததால் ஆத்திரம் அடைந்து, போலீஸ்காரரின் செல்போனை சாலையில் போட்டு உடைத்த வியாபாரி கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த புழுதிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் நித்தின் திவாரி (வயது 45). கானத்தூரில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். கானத்தூரில் இருந்து நீலாங்கரைக்கு நித்தின் திவாரி நேற்று காரில் வந்தார்.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் போலீசார் சாலையில் தடுப்புகளை வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது தூரம் சென்று தான் திரும்ப வேண்டும்.

ஆனால் நித்தின் திவாரி போலீசார் வைத்திருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு காரில் செல்ல முயன்றார். இதை ரோந்து பணியில் இருந்த நீலாங்கரை போலீஸ்காரர் கிருஷ்ணன் தடுத்து நிறுத்தினார். அனைத்து வாகனங்களும் சுற்றி தான் வர வேண்டும். தடுப்புகளை அகற்றக்கூடாது என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது போலீஸ்காரர் கிருஷ்ணன் தனது செல்போனில், நித்தின் திவாரியின் வாக்குவாதத்தை வீடியோ எடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நித்தின் திவாரி, உடனே போலீஸ்காரரின் செல்போனை பிடுங்கி சாலையில் போட்டு உடைத்தார்.

இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து நித்தின் திவாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story