செல்போனை பறித்த நபர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று பிடித்த வாலிபர்


செல்போனை பறித்த நபர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று பிடித்த வாலிபர்
x
தினத்தந்தி 26 Aug 2018 3:45 AM IST (Updated: 26 Aug 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேட்டில், தனது செல்போனை பறித்த மர்மநபர்களை வாலிபர் மோட்டார் சைக்கிளில் விரட்டிச்சென்று பிடித்தார். அவரை போலீசார் பாராட்டினார்கள்.

பூந்தமல்லி,

சென்னை சூளைமேடு, பெரியார் பாதை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன்(வயது 34). இவர் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 100 அடி சாலையில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் வெங்கடேஸ்வரன் கையில் இருந்த செல்போனை பறித்துச்சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ‘திருடன், திருடன்’ என கூச்சலிட்டார். தொடர்ந்து அவர் அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரிடம் நடந்தவற்றை கூறினார். பின்பு அந்த நபரின் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து, இருவரும் செல்போனை பறித்துச்சென்ற நபர்களை விரட்டிச் சென்றனர்.

கோயம்பேடு சிக்னலில் போக்குவரத்து நெரிசல் காரணமாக செல்போனை பறித்துச்சென்ற மர்ம நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து வெங்கடேஸ்வரனும், அந்த நபரும் பொதுமக்களின் உதவியுடன் செல்போன் பறிப்பு கொள்ளையர்களை மடக்கி பிடித்து கோயம்பேடு போலீசிடம் ஒப்படைத்தனர்.

அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் செல்போன் பறித்துச்சென்ற இருவரும் அரிகரசுதன்(25), கார்த்திக்(21), என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

அவர்கள் வேறு எங்காவது இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போனை பறித்துச்சென்ற நபர்களை விடாமல் விரட்டிச்சென்று பிடித்த வெங்கடேஸ்வரனை போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினார்கள்.

Next Story