வங்கி கடனில் வாங்கிய காரை அடமானம் வைத்து மோசடி 5 பேர் கைது


வங்கி கடனில் வாங்கிய காரை அடமானம் வைத்து மோசடி 5 பேர் கைது
x
தினத்தந்தி 26 Aug 2018 3:45 AM IST (Updated: 26 Aug 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

வங்கி கடனில் வாங்கிய காரை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை கோடம்பாக்கம் சிவன் கோவில் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால்(வயது 43). கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் 2-வது தெருவில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முன்பணம் செலுத்தி காரை வாங்கினார். மீதத் தொகைக்கு வங்கியில் கடன் பெற்று இருந்தார்.

பின்னர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக காருக்கான மாத தவணையை அவரால் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் மற்றொரு டிராவல்ஸ் நிறுவனம் மூலம் அறிமுகமான தஞ்சாவூரைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் ரூ.1½ லட்சத்தை ஜெயபாலிடம் கொடுத்து காருக்கான மாத தவணையை வங்கியில் நேரடியாக தானே செலுத்துவதாக கூறி காரை வாங்கி சென்றார்.

ஆனால் அவர் இதுவரை காருக்கு மாத தவணை செலுத்தவில்லை. காரையும் திரும்ப ஒப்படைக்காமல் ஏமாற்றி வந்தார். இதனால் வங்கி அதிகாரிகள் காருக்கான பணத்தை செலுத்துமாறு ஜெயபாலிடம் கேட்க ஆரம்பித்துள்ளனர்.

இதுபற்றி ஜெயபால், வெற்றிவேலிடம் கேட்டபோது அவர் காரை திருச்சியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தது தெரியவந்தது. மேலும் வெற்றிவேல், ஜெயபாலுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஜெயபால் வடபழனி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வெற்றிவேல் அந்த காரை தினேஷ்குமாரிடம் அடமானம் வைத்து ஒரு தொகையை வாங்கி உள்ளார். தினேஷ்குமாரும் அந்த காரை அதைவிட அதிக தொகைக்கு வேறு ஒருவரிடம் அடமானம் வைத்துள்ளார். இதைப்போல் ஒருவரை ஒருவர் மாறி, மாறி காரை அடமானம் வைத்து பணம் ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த மோசடியில் ஈடுபட்ட தஞ்சாவூரை சேர்ந்த வெற்றிவேல்(32), பிரதீப்(29), பிரபு(34), தினேஷ்குமார்(29), அருண்பிரசாத்(34) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காரையும் பறிமுதல் செய்தனர்.

Next Story