மகாத்மா பட்டம் பெற்றாலும் பணம் இல்லாவிட்டால் தேர்தலில் வெற்றி பெற முடியாது திருநாவுக்கரசர் பேச்சு


மகாத்மா பட்டம் பெற்றாலும் பணம் இல்லாவிட்டால் தேர்தலில் வெற்றி பெற முடியாது திருநாவுக்கரசர் பேச்சு
x
தினத்தந்தி 26 Aug 2018 4:45 AM IST (Updated: 26 Aug 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

மக்களுக்கு தொண்டு செய்து மகாத்மா பட்டம் பெற்றாலும் பணம் இல்லாவிட்டால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று தஞ்சையில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் திருநாவுக்கரசர் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சையை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு க.மாணிக்கவாசகம் தனது பணி காலத்தில் சந்தித்த சுவாரஸ்யமான சம்பவங்களை தொகுத்து 55 சிறுகதைகள் அடங்கிய நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டு விழா தஞ்சை தீர்க்கசுமங்கலி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் சுபாஷ்சந்திரபோஸ் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு கவிஞர் உலகநாதன் வரவேற்றார்.

விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மாணிக்கவாசகம், தனது பணிகாலத்தில் நடந்த உண்மை சம்பங்களை தொகுத்து 55 சிறுகதைகளாக நூல் எழுதியுள்ளார். இவற்றை கொண்டு 55 திரைப்படங்கள் எடுக்கலாம். அந்த அளவுக்கு சுவைபட எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையும் மக்களுக்கு ஒரு அறிவுரையை வழங்குகிறது.

தமிழக மக்களுக்கு மறதி அதிகமாக இருக்கிறது. அதுதான் அரசியல்வாதிகளுக்கு பிரச்சினை இல்லாமல் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை நீங்களும்(மக்கள்) மறந்து விடுகிறீர்கள். நாங்களும் மறந்து விடுகிறோம்.

கேரளா, கர்நாடகத்தில் கனமழை பெய்துள்ள அதே நேரத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிகளில் தண்ணீர் இல்லை. எவ்வளவு நேர்மையான அதிகாரிகளாக இருந்தாலும் அரசியல்வாதிகளின் பேச்சுக்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டிய நிலை உள்ளது என இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல நல்ல தலைவர் காமராஜரை தேர்தலில் மக்கள் தோற்கடித்து விட்டார்கள் என்று தனது கவலையை தெரிவித்துள்ளார்.

காமராஜர் மட்டுமின்றி மக்களுக்கு தொண்டு செய்து மகாத்மா பட்டம் பெற்றால் கூட, பணம் இல்லை என்றால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. அரசியல் மிக மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அரசியலில் மாற்றம் வர வேண்டும். இல்லையென்றால் கோடீஸ்வரர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். பணம் இல்லையென்றால் தேர்தலில் எதற்காக நிற்க வேண்டும் என்று மக்களே கேள்வி கேட்கும் நிலை உருவாகி விட்டது. நீதித்துறை சரியாக இருக்கும் வரை மக்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நூலை பெற்றுக்கொண்ட மதுரை ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி நாகமுத்து பேசியதாவது:-

போலீஸ் அதிகாரிகள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும். நேர்மை என்பது லஞ்சம் பெறாமல் இருப்பது மட்டுமல்ல, சொல்லிலும், செயலிலும் நேர்மையாக செயல்பட வேண்டும். போலீஸ் அதிகாரிகள் சீருடைகளை மிடுக்காக அணிய வேண்டும். போலீஸ்காரர்கள், குற்ற வழக்கில் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டார்கள் என்பதை வைத்து தீர்ப்பு கூற முடியாது. சட்டப்படி தான் தீர்ப்பு வழங்க வேண்டும்.

போலீஸ்காரர்கள் சரியாக செயல்படுவதில்லை என்பது பொதுமக்களின் பொதுவான கருத்து. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வழக்கிலும் போலீஸ்காரர்களால் புலனாய்வு செய்ய முடியாது. எனவே போலீஸ்காரர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். போலீஸ் பணி மிகவும் கடினமானது. ஒரு வழக்கை அவர்கள் வெற்றிகரமாக முடிப்பது என்பது சிரமமானது. எந்த இடர்பாடுகளையும் சந்திக்க தயாராக இருப்பவர்கள் தான் வாழ்வில் வெற்றி பெற முடியும். அதனால் பணிசுமை என்பதை போலீஸ்காரர்கள் மறந்துவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஓய்வு பெற்ற போலீஸ் துணை ஆணையர் சித்தண்ணன், ஓய்வு பெற்ற உதவி ஆணையர் மாடசாமி, ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமாணிக்கம், பத்திரிகையாளர் சீனிவாசன் ஆகியோர் பேசினர்.

விழாவில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணசாமி வாண்டையார், லோகநாதன், பி.ஜி.ராஜேந்திரன், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெங்கராஜன், திருஞானசம்பந்தம் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு மாணிக்கவாசகம் ஏற்புரை ஆற்றினார். 

Next Story