மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவை தலைமை ஆசிரியை தேர்வு


மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவை தலைமை ஆசிரியை தேர்வு
x
தினத்தந்தி 26 Aug 2018 5:00 AM IST (Updated: 26 Aug 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கோவையை சேர்ந்த தலைமை ஆசிரியை தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தியதற்கு கிடைத்த பரிசு என்று அவர் கூறினார்.

கோவை,

ஆசிரியராக இருந்து நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5–ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த விருதுக்கு கோவை மாவட்டம் மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியை ஆர்.ஸதி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

இது குறித்து தலைமை ஆசிரியை ஆர்.ஸதி கூறியதாவது:–

நான் போத்தனூர் அருகே சீனிவாசநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். கடந்த 1995–ம் ஆண்டு இடைநிலை ஆசிரியையாக சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியர் பணியை தொடங்கினேன். 1996–ம் ஆண்டு வெள்ளலூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாறுதலாகி சென்றேன். 2009–ம் ஆண்டு போடிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு பெற்று சென்றேன்.

2012–ம் ஆண்டு அரிசிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாறுதலாகி சென்றேன். 2016–ம் ஆண்டு முதல் மலுமிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பணியாற்றி வருகிறேன். எனக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நான் மலுமிச்சம்பட்டி பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக வந்த போது 146 மாணவ–மாணவிகள் படித்து வந்தனர். எனவே மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்காக மலுமிச்சம்பட்டி பகுதியில் தினமும் தெருத்தெருவாக அலைந்து திரிந்து அரசு சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், கல்வி கற்ப தன் பயன் குறித்து பெற்றோர்களிடம் விளக்கி கூறி மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தேன். தற்போது எங்கள் பள்ளியில் 270 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் கண்தெரியாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகள் 28 பேர் படித்து வருகின்றனர்.

எங்கள் பகுதி பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக பள்ளியில் சிறந்த 6 மாணவ–மாணவிகளை தேர்வு செய்து ‘குட்டி கமாண்டோ’ என்ற அமைப்பை 2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் உருவாக்கினேன். இவர்கள் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை விசில் அடித்தபடி சென்று திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கு முதலில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நான் அவர்களிடம் விளக்கி கூறிய பிறகு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இதற்காக பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது.

எங்கள் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டு முதல் டேப்லெட் (கையடக்க கணினி) மூலம் மாணவ–மாணவிகளுக்கு எளிதில் புரியும்படி பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 2 ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன சமையல் அறை, வகுப்புகளில் மின்விசிறி, நவீன கழிவறை, மாற்றுத்திறனாளி மாணவ–மாணவிகளுக்கு தனி கழிப்பிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பள்ளி வளாகத்தில் உள்ள மரங்களை தினமும் பராமரித்தல், பள்ளியின் கட்டிட மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு மாணவ–மாணவிகளின் ஒழுக்கம் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தி வருகிறேன்.

ஒரு கட்டிடம் கட்டுவதற்கு எப்படி அஸ்திவாரம் அவசியமோ? அதேபோல் மாணவ–மாணவிகளுக்கு தொடக்க கல்வி தான் சிறந்த அடித்தளமாக இருக்கும். அப்போது தான் உயர் கல்விக்கு செல்லும் போது மாணவர்களின் கற்றல் திறன் மேலும் உயரும். சுற்றுலா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மாணவ–மாணவிகளை கல்வி சுற்றுலா அழைத்து செல்கிறேன்.

மாணவ–மாணவிகளின் நலனுக்காக பல்வேறு வசதிகளை செய்து வருவதால் நான் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தேன். அதில் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை சேர்க்கை அதிகரிப்பு, தூய்மை, கட்டமைப்பு, கற்றல் திறன் மேம்பாடு உள்பட 13 கேள்விகளுக்கு 500 பக்கங்களுக்கு பதில் அளித்து அனுப்பி இருந்தேன்.

இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இருந்து நேர்முக தேர்வில் பங்கேற்க அழைப்பு வந்தது. நான் கடந்த 20–ந் தேதி டெல்லிக்கு சென்று நேர்முக தேர்வில் பங்கேற்றேன். அங்கு எங்கள் பள்ளி மற்றும் மாணவ–மாணவிகளின் கற்றல் திறன் குறித்து 8 நிமிடங்களில் விளக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அதில் நான் அவர்கள் கொடுத்த கால அவகாசத்தில் பள்ளியின் பெருமைகளை எடுத்து கூறினேன். தற்போது நான் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். மாணவ–மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தியதற்கு பரிசாக இந்த விருதுக்கு நான் தேர்வாகி உள்ளதாக கருதுகிறேன். இதற்கு உதவிய மதுக்கரை ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் இருதயமரிய ஜோசப், மாணவ–மாணவிகள், பெற்றோர், கல்வித்துறை அதிகாரிகள், பள்ளியின் கட்டிட மேம்பாட்டுக்கு உதவியவர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து தலைமை ஆசிரியை ஆர்.ஸதி மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story