தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேரளாவுக்கு ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில்கள்


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேரளாவுக்கு ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில்கள்
x
தினத்தந்தி 26 Aug 2018 3:45 AM IST (Updated: 26 Aug 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேரளாவுக்கு 1 லட்சம் லிட்டர் குடிநீர் பாட்டில்கள் ஏற்பட்ட லாரிகளை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.

கோவை,

கேரளாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற் பட்டது. வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு பல இடங்களில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கேரளாவுக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், எட்டிமடை சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில்கள் ஏற்பட்ட 11 லாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:–

கேரள மாநிலத்தில் கடுமையான வெள்ள சேதம் ஏற்பட்டது. அதற்கு முதலில் ரூ.5 கோடி நிவாரணமாக ஒதுக்கியது தமிழக முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான். அதன் பிறகும் ரூ.5 கோடி நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டது. கேரள மாநிலத்தில் அனைத்து மக்களும் இயல்பு நிலைக்கு திரும்ப என்னென்ன உதவிகள் வேண்டுமோ அவை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் தமிழகத்தில் இருந்து மருந்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டத்தில் இருந்து 30–க்கும் மேற்பட்ட லாரிகளில் ரூ.4 கோடி செலவில் 42 அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து பல பொருட் கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 55–க்கும் மேற்பட்ட லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்து உள்ளோம்.

தற்போது கேரள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் ஒரு லட்சம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில்கள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. யார் பாதிக்கப்பட்டாலும் முதலில் சென்று தமிழக மக்கள் உதவி செய்து வருகிறார்கள். அதற்கு தமிழக அரசும் துணையாக இருக்கிறது.

வெள்ளநீரில் இருந்து சுத்தமான குடிநீர் தயாரிக்கக்கூடிய எந்திரத்தையும் சிட்கோவில் இருந்து அனுப்பி வைத்து உள்ளனர். அதன் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும். அதுபோன்று கோவை மாவட்ட பொதுமக்கள், வியாபாரிகள், தன்னார்வ அமைப்புகள் என பலரும் உதவி செய்து உள்ளளர். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணியால் செய்யப்பட்ட பைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:–

பிளாஸ்டிக் பைகள் தயாரிக்க 12 நிமிடம் ஆகிறது. ஆனால் அது மண்ணில் மக்க ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் நிலத்தடி நீர் மண்ணுக்குள் செல்வதை தடுக்கிறது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் வருகிற ஜனவரி மாதம் 1–ந் தேதியில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி பிளாஸ்டிக் பொருட் களை தவிர்த்து, பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த முன்வர வேண்டும். அதுபோன்று அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story