பழனி அருகே, சண்முகநதி ஆற்றில் மணல் அள்ளிச்சென்ற லாரி பறிமுதல்


பழனி அருகே, சண்முகநதி ஆற்றில் மணல் அள்ளிச்சென்ற லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 26 Aug 2018 4:31 AM IST (Updated: 26 Aug 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே சண்முகநதி ஆற்றில் மணல் அள்ளிச்சென்ற லாரியை வாடகை கார் மூலம் தாசில்தார் விரட்டி பிடித்தார். பின்னர் அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

பழனி,

பழனியை அடுத்த கோட்டத்துரை கிராமம் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள சண்முகநதி ஆற்றில் இருந்து இரவு வேளையில் சிலர் மணல் அள்ளிச்செல்வதாக தாசில்தார் சரவணக்குமாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஆனாலும் மணல் அள்ளுபவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சண்முகநதி ஆற்றில் பொக்லைன் எந்திரம் மூலம் சிலர் மணல் அள்ளுவதாக தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அலுவலக வாகனத்தில் அங்கு சென்றால் மணல் அள்ளுபவர்கள் தப்பிவிடுவார்கள் என கருதிய தாசில்தார் வாடகை கார் மூலம் அப்பகுதிக்கு சென்றார்.

அவருடன் வருவாய்த்துறை அதிகாரிகளும் சென்றனர். அப்போது சண்முகநதி ஆற்று பகுதியில் இருந்து மணல் அள்ளிக்கொண்டு ஒரு லாரி வருவதை தாசில்தார் பார்த்தார். உடனே அந்த லாரியை நிறுத்தும்படி சைகை செய்தார். ஆனால் லாரி நிற்காமல் வேகமாக பழைய தாராபுரம் சாலையில் சென்றது.

இதையடுத்து அந்த லாரியை காரில் பின்தொடர்ந்து தாசில்தாரும், வருவாய்த்துறையினரும் விரட்டி சென்றனர். பின்னர் கல்துரை பகுதி அருகே தாசில்தார் மற்றும் அதிகாரிகள் லாரியை மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து அதை தாலுகா அலுவலக வளாகத்தில் நிறுத்தினர்.

இதுகுறித்து தாசில்தாரிடம் கேட்ட போது, பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த அபினேஷ் என்பவர் தான் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் மணல் அள்ளிச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் உரிமையாளரான உடுமலைப்பேட்டை அருகே உள்ள ராஜாவூரை சேர்ந்த சேகர் என்பவருக்கு ரூ.30 ஆயிரம் வரை அபராதம் விதிக்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

Next Story