கால்நடை மருத்துவ கல்லூரிகளின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்


கால்நடை மருத்துவ கல்லூரிகளின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் - அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 26 Aug 2018 5:16 AM IST (Updated: 26 Aug 2018 5:16 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டு வல்லுனர்கள் உதவியோடு கால்நடை மருத்துவ கல்லூரிகளின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திருப்பூரில் கூறினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மதியம் திருப்பூர் கஜலெட்சுமி தியேட்டர் அருகே நொய்யல் ஆற்றோரம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி, பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு துணி பைகளை வழங்கினார். பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ–மாணவிகள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த ஊர்வலம் மங்கலம் ரோடு டைமண்ட் தியேட்டர் அருகே நிறைவடைந்தது. மேலும் நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியையும் அமைச்சர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் செந்தில்விநாயகம் (திருப்பூர் வடக்கு), சண்முகம்(திருப்பூர் தெற்கு), உதவி சுற்றுச்சூழல் பொறியாளர்கள் உதயகுமார், வனஜா, உதவி பொறியாளர்கள், தாசில்தார்கள் ஜெயக்குமார் (திருப்பூர் வடக்கு), ரவிச்சந்திரன் (திருப்பூர் தெற்கு) உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரத்தை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தில் இந்த பிரசாரம் இன்று(நேற்று) தொடங்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை பயன்படுத்துவதால் சுகாதாரமான வாழ்க்கையை மக்கள் வாழ முடியும்.

தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 4 கால்நடை மருத்துவ கல்லூரிகள், கோழி உற்பத்தி படிப்பை கொண்ட கல்லூரி, உணவு, பால் பதனிடுவது தொடர்பாக கல்லூரி என 6 கல்லூரிகள் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த கால்நடை மருத்துவ கல்லூரிகளில் மாணவ–மாணவிகள் அதிக அளவில் சேர்ந்து படிக்கிறார்கள். வெளிநாடுகளின் உதவியோடு இந்த கால்நடை மருத்துவ கல்லூரிகளின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும். இதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வல்லுனர்களை அழைத்து வந்து ஆலோசனை நடத்தி வெளிநாடுகளுக்கு இணையான கல்வியை மாணவ–மாணவிகளுக்கு அளிப்பதற்கும், தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்றார்.


Next Story