குமாரசாமியிடம் வேலைவாய்ப்பு கேட்ட மாற்றுத்திறனாளி பெண்
ராக்கி கயிறு கட்டிய பின் கொடுத்த பணத்தை வாங்க மறுத்து குமாரசாமியிடம் வேலைவாய்ப்பு கேட்டார் மாற்றுத்திறனாளி பெண்.
பெங்களூரு,
பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி குமாரசாமி பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரிகளை கண்டறிந்து ‘சீல்’ வைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள், வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்கள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.
இந்த கூட்டம் நடந்து கொண்டிருந்த வேளையில் வாய் பேச முடியாத, காது கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவர் அங்கு வந்தார். அவர் முதல்-மந்திரி குமாரசாமியை சந்தித்து, ரக்ஷா பந்தனையொட்டி அவருக்கு ராக்கி கயிறு கட்டினார்.
அப்போது அந்த இளம்பெண்ணுக்கு முதல்-மந்திரி குமாரசாமி ரூ.2 ஆயிரம் கொடுத்தார்.
ஆனால் அதை வாங்க மறுத்த அந்த இளம்பெண், தனக்கு வேலை கொடுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்.
அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்-மந்திரி குமாரசாமி, உடனே அவருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story