சேலம் சுற்றுவட்டார பகுதியில் சூரியனை சுற்றி தோன்றிய அதிசய ஒளிவட்டம்


சேலம் சுற்றுவட்டார பகுதியில் சூரியனை சுற்றி தோன்றிய அதிசய ஒளிவட்டம்
x
தினத்தந்தி 26 Aug 2018 5:30 AM IST (Updated: 26 Aug 2018 5:30 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சுற்றுவட்டார பகுதியில் வானத்தில் உள்ள சூரியனை சுற்றி அதிசய ஒளிவட்டம் தெரிந்தது. இதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

சேலம்,

சேலத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பகலில் வெளியே செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இந்தநிலையில், சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் வானத்தில் உள்ள சூரியனை சுற்றி மிகப்பெரிய அளவிலான ஒளிவட்டம் தென்பட்டது. வானவில் போன்று தோன்றிய அதை பொதுமக்கள் கண்டு வியந்தனர். ஒருசிலர் தங்களது செல்போனில் சூரியனை சுற்றி தெரிந்த அதிசய ஒளிவட்டத்தை படம் பிடித்து தங்களது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்தனர். சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் தென்பட்ட அந்த ஒளிவட்டம் சுமார் 30 நிமிடம் வரை நீடித்தது. பின்னர் அது தானாக மறைந்துவிட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயமுருகன் கூறும் போது, பூமியின் சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் நீர்த் திவலைகள் மற்றும் பனித்துளிகள் அதிகரிக்கும்போது சூரிய ஒளியானது அதன்மேல் பட்டு ஒளி சிதறடிக்கப்படும். அந்த சமயத்தில் சூரியனை சுற்றிலும் ஒளிவட்டம் போல் தென்படும். அதுபோலவே தற்போது நமது வளிமண்டலத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. சுமார் 6 கி.மீ. தொலைவில் 22 டிகிரி ஒளிவட்டத்தில் இந்த ஒளி சிதறல்கள் தெரிந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வின்போது சம்பந்தப்பட்ட பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படும். அதன் அடிப்படையில் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது, என்றார்.

Next Story