29-ந் தேதி சேலம் வரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு


29-ந் தேதி சேலம் வரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு
x
தினத்தந்தி 26 Aug 2018 5:40 AM IST (Updated: 26 Aug 2018 5:40 AM IST)
t-max-icont-min-icon

29-ந் தேதி சேலம் வரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் என மாநகர், மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சேலம்,

சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் எம்.பி., சக்திவேல் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வருகிற 29-ந் தேதி இரவு 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் வருகிறார். அவருக்கு மாநகர், மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். இந்த வரவேற்பில் கட்சியினர் திரளாக பங்கேற்க வேண்டும். உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற அயராது உழைக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பின்னர் வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பேசியதாவது:- முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 30-ந் தேதி காலையில் எடப்பாடியில் நடைபெறும் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார். அதன்பின்பு புதிதாக பொறுப்பேற்ற கூட்டுறவு சங்க தலைவர், துணைத் தலைவர்கள், இயக்குனர் ஆகியோரை சந்திக்கிறார். மாலையில் நெடுஞ்சாலையில் உள்ள அவருடைய வீட்டிற்கு வருகிறார்.

31-ந் தேதி காலையில் அம்மாபேட்டையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைக்கிறார். பின்னர் நேரு கலையரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். பின்னர் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில் கூட்டுறவு சங்க நிர்வாகிகளை சந்திக்கிறார்.

1-ந் தேதி காலையில் கருமந்துறையில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர் மாலையில் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவருடைய வீட்டில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். 2-ந் தேதி காலை 10.40 மணிக்கு கமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை செல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைராஜ், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ராம்ராஜ், மாநகர், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், துணைசெயலாளர் ஏ.கே.எஸ்.பாலு, மாமாங்கம் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story