உஷாரய்யா உஷாரு


உஷாரய்யா உஷாரு
x
தினத்தந்தி 26 Aug 2018 6:21 AM GMT (Updated: 26 Aug 2018 6:21 AM GMT)

அதிகாலை மூன்று மணி. பெருநகரத்தின் ஒதுக்குப்புற பகுதியில் இரவு ரோந்து சென்றுகொண்டிருந்த போலீசார் கண்களில் அந்த நால்வர் அணி தென்பட்டது.

திகாலை மூன்று மணி. பெருநகரத்தின் ஒதுக்குப்புற பகுதியில் இரவு ரோந்து சென்றுகொண்டிருந்த போலீசார் கண்களில் அந்த நால்வர் அணி தென்பட்டது. அவர்கள் தூரத்தில் வருவது தெரிந்ததும், போலீசார் வாகனத்தின் விளக்குகளை எல்லாம் அணைத்துவிட்டு உள்ளே இருந்து அவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நால்வரும், இருட்டில் போலீஸ் வாகனம் நி்ன்றுகொண்டிருந்த தெரு வழியாக வந்துகொண்டிருந்தார்கள். அருகில் வரும்போது அவர்கள் கையில் இரண்டு பைகள் இருப்பது தெரிந்தது. கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட அவர்கள் கலகலப்பாக சிரித்து பேசிக்கொண்டு வந்தனர்.

நெருங்கி வரும்போது அவர்கள் நால்வரும் மந்திரவாதிகள் என்பதை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். ஏதோ ஒரு வீட்டில் மந்திரவாத பூஜை செய்துவிட்டு திரும்புகிறார்கள் என்பது போலீசாருக்கு புரிந்தது. உடனே அவர்கள் வாகனத்தின் விளக்கை எரியவிட்டார்கள். அப்போது அவர்கள் அனைவர் உருவமும் பளிச்சென தெரிந்தது. அதில் ஒருவர் கையில் ரத்தக் கறை படிந்திருந்ததை ஒரு போலீஸ்காரர் பார்த்துவிட்டார். அது உடனடியாக அவருக்கு எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், கடந்து போன அவர்களை பின்பக்கத்தில் இருந்து உற்றுப்பார்த்துக்கொண்டே இருந்தார். நால்வரில் ஒருவரது பையில் இருந்து ரத்தம் சொட்டுச்சொட்டாக கீழே விழுவது தெரிந்தது.

உடனே அவர்களை அழைத்தார். சற்று யோசித்த நால்வரும், அழைப்பது போலீஸ் என்பதை உணர்ந்ததும், போலீஸ் வாகனத்தை நோக்கி நடந்துவந்தார்கள். அவர்கள் மது போதையில் இருந்தனர். அவர்களது ஊர், விலாசம், இங்கே வந்ததன் நோக்கம் எல்லாவற்றையும் விசாரித்த போலீசார், பையை கீழேவைத்து திறந்து காட்டும்படி சொன்னார்கள். அவர்களும் ஒவ்வொன்றாக எடுத்து வெளியேவைத்தார்கள். பூஜையில் வைக்கப்பட்டிருந்த நிறைய பொருட்கள் இருந்தன. அவைகளில் பெரும்பாலானவை உணவுப் பொருட்கள். அதன் அடியில் பாலிதீன் கவரில் சுற்றப்பட்ட நிலையில் ஏதோ ஒரு பறவை செத்துக்கிடந்தது. அந்த பாலிதீன் கவர் கிழிந்திருந்ததால், அதன் ரத்தம் கீழே வடிந்திருக்கிறது.

அதை வெளியே எடுத்துக்காட்டும்படி கூற, அது ஆந்தை என்பது புரிந்தது. அதன் பின்னணியில் ஏதோ ரகசியம் இருக்கிறது என்ற சந்தேகம் போலீசாருக்கு வர, அவர்களை ஜீப்பில் ஏற்றி போலீஸ்நிலையத்திற்கு கொண்டுபோய் விசாரித்தார்கள்.

‘ஆந்தையை ஏன் கொன்றீர்கள்?’ என்று போலீசார் கேட்ட கேள்விக்கு அந்த மந்திரவாதிகள் அளித்த பதில் வித்தியாசமானதாகவும், விபரீதமானதாகவும் இருந்தது. இந்த ‘ஆந்தை நெட்ஒர்க்’ மிகப்பெரிய அளவில் செல்வந்தர்களை ஏமாற்றி மோசடி செய்து வருவதும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதோ அந்த மந்திரவாதி குழு தலைவனின் வாக்கு மூலத்தை அப்படியே படியுங்கள்!

‘பெரும் செல்வந்தர்களும், பிரபலங்களும் மனதளவில் ரொம்ப பலவீனமானவர்களாக இருப்பார்கள். தங்கள் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் நினைத்து ரொம்ப பயப்படுவார்கள். அதிலும் தங்கள் வீட்டில் வாஸ்து என்ற பெயரில் வளர்க்கப்படும் மீேனா, நாயோ செத்தால்கூட நிலை குலைந்துபோவார்கள். அப்போது ஏதாவது ஒரு ‘லிங்க்’கில் எங்களை அணுகுவார்கள். நாங்கள் அவர்களுக்கு புதிய எதிரிகள் தோன்றிவிட்டதாகவும், அவர்கள் ஏவிவிட்ட துர்சக்திகளால்தான் அந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், அதை தடுக்காவிட்டால் குடும்பத்திற்கு பேரழிவு ஏற்படும் என்றும் சொல்வோம்.

உடனே அவர்கள், ‘அதை தடுத்து நிறுத்த என்ன வழி?’ என்று கேட்பார்கள். நாங்கள், யாகம் வளர்த்து மாந்த்ரீக பூஜை நடத்தவேண்டும் என்று சொல்வோம். அந்த யாகம் முழுபலன் அளிக்கவேண்டும் என்றால், யாகத்தில் ஆந்தையின் ரத்தம் சில சொட்டுகள் விடவேண்டும் என்று கூறுவோம். அவர்கள் சம்மதித்துவிடுவார்கள்’ என்று போதையோடு சொன்ன மந்திரவாதி இறுதியாக சொன்ன விஷயம்தான் அதிரடியானது.

‘ஆந்தை கிடைப்பது அபூர்வம். அதை பல இடங்களில் ஆள் நியமித்து தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். ஆந்தை கிடைக்க குறைந்தது ஒரு மாதம் வரை ஆகலாம்’ என்று கூறி, ஆந்தை புகழ்பாடுவார்களாம். இவர்களிடம் சமீபத்தில் ஒரு பிரபலம் 15 லட்சம் ரூபாய் கொடுத்து, ஒரு ஆந்தை வாங்கி அதை வைத்து மாந்த்ரீக பூஜை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்.

சென்னையில் கட்டிமுடிக்கப்படாமல் அரைகுறையாக கிடக்கும் அப்பார்்ட்மென்டில் அந்த ஆந்தை பிடிக்கப்பட்டிருக்கிறது. அதை பிடித்துக்கொடுத்தவருக்கு கிடைத்த கூலி 500 ரூபாய்தானாம்!

மந்திரவாதம் என்ற பெயரில் பிரபலங்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் பார்த்தீர்களா..!

- உஷாரு வரும்.

Next Story