மீன்: வளர்க்கலாம்.. ருசிக்கலாம்.. சம்பாதிக்கலாம்..
மீனில் இருந்து கருவாடு எப்படி பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது என்பதை கடந்த வாரம் பார்த்தோம். தரமான மீன்கருவாட்டையும் நம்மால் தயாரிக்க முடியும்.
மீனில் இருந்து கருவாடு எப்படி பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது என்பதை கடந்த வாரம் பார்த்தோம். தரமான மீன்கருவாட்டையும் நம்மால் தயாரிக்க முடியும். அது பற்றி பார்ப்போம்!
மேம்படுத்தப்பட்ட முறையில் கருவாடு தயாரித்தல்
மீன் இறங்குத் தளங்களில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களை உடனடியாக தூய்மையான கடல் நீரை கொண்டு கழுவ வேண்டும். இதன் மூலம் மீன்களில் உள்ள அழுக்குகள், செதில்கள், தேவையற்ற கழிவுகள் அகற்றப்படுகின்றன. இவ்வகையில் தூய்மை செய்யப்படும் மீன்களை மீன் கருவாடு தயாரிக்கும் இடத்திற்கு விரைவாக கொண்டு செல்ல வேண்டும். பின்பு 10 பி.பி.எம் அளவிலுள்ள குளோரினேடட் நீரை பயன்படுத்தி மீன்களை சுத்தம் செய்ய வேண்டும். கருவாடு தயாரிக்கும் இடம் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கருவாடு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் இடத்தை 200 பி.பி.எம். மற்றும் கலன்களை 20 பி.பி.எம். அளவில் குளோரினேடட் நீரை பயன்படுத்தி தூய்மை செய்ய வேண்டும். இவ்வகையில் தூய்மை செய்யப்பட்ட இடத்தில் அல்லது மேஜையில் மீன்களின் குடல்களை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். இதுவே சாளை மீன்களாக இருந்தால் செதில்களையும் அகற்ற வேண்டும். அகற்றிய கழிவுகளை குப்பைத் தொட்டிகளில் உடனே போட வேண்டும். பயன்படுத்தப்படும் மேஜைகள் எப்பொழுதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சிறிய வகை மீன்களின் செதில் மற்றும் குடலை அகற்றுவது சிரமமான காரியம் என்பதால் அவற்றை நன்றாக கழுவியவுடன் உப்பை சேர்த்து பதப்படுத்த வேண்டும். கழிவுகள் அகற்றப்பட்ட பெரிய வகை மற்றும் நடுத்தர மீன்களை துளையுள்ள பிளாஸ்டிக் கூடைகளில் வைத்து சுத்தமான நீரால் கழுவ வேண்டும். நீர் வடிந்தபின் 1:4 என்ற விகிதத்தில் அதாவது, 1 பங்கு உப்பு, 4 பங்கு மீன் என்ற வகையில் சுத்தப்படுத்தப்பட்ட சிமெண்ட் தொட்டிகளில் அடுக்க வேண்டும். 24 மணிநேரம் கழித்து மீண்டும் சுத்தமான நீரால் கழுவ வேண்டும்.
இதனால் மீனில் உள்ள எஞ்சிய உப்புகள் வெளியேற்றப்படுகின்றன. உப்பிலிடப்பட்ட மீன்களை மேடையுடன் கூடிய சிமெண்ட் தரை அல்லது மூங்கில் அல்லது வலையைப் பயன்படுத்தி உலர வைக்க வேண்டும். அவற்றை மூங்கில் பாய் தரை விரிப்பு மூலமாகவும் உலர வைக்கலாம். உலர்த்தப்பட்ட மீன்களில் நீரின் தன்மை 25 சதவீதத்துக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் சுகாதாரமான முறை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
அதன் பின்னர் மீன்களை கால்சியம் புரோப்பியோனேட் மற்றும் மென்மையாக தூளாக்கப்பட்ட உப்புத்தூள் பயன்படுத்தி உலர்த்த வேண்டும். அதாவது, 3 பங்கு கால்சியம் ப்ரோப்பியோனேட் எனில் 27 பங்கு உப்புத்தூள் என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும். விற்பனைக்கு ஏற்றவாறு பாலித்தீன் பைகள்(சில்லறை வியாபாரம்) மற்றும் பாலித்தீன் உறையிட்ட கோணிப்பைகளில்(மொத்த வியாபாரம்) நிரப்ப வேண்டும். இதன் மூலம் நோய் தொற்று மற்றும் சிவப்பு ஹேலோபைலிக் பாக்டீரியாவின் தாக்கம் தடுக்கப்படுகின்றன. பத்து கிலோ மீனுக்கு ஒரு கிலோ பதப்படுத்தப்படும் கலவை தேவைப்படுகிறது. சமையல் செய்வதற்கு முன்பு கருவாட்டை வெந்நீரில் ஊற வைப்பதன் மூலம் மிகுதியான உப்பு மற்றும் பதப்படுத்துவதற்கு பயன்படுத்திய பொருட்களை அகற்றலாம்.
பழைய முறையில் தயாரிக்கப்படும் மீன் கருவாடு இரண்டு மாதத்திற்குள் கெட்டுப் போய்விடும். மேம்படுத்தப்பட்ட முறையில் தயாரிக்கப்படும் மீன்கருவாடு குறைந்தபட்சம் 8 மாதங்கள் கெடாமல் இருக்கும். மேலும், ஏழை மீனவ மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட மீன் கருவாடு தயாரிப்பு முறையானது மிகவும் எளிதாக பின்பற்றக் கூடியதாகவும் உள்ளது.
மேம்படுத்தப்பட்ட முறையில் மீன்கருவாடு தயாரிக்கப்படுவதன் நன்மைகள்:
தயாரிக்கும் முறை எளிது.
நோய் தாக்குதல் மற்றும் பாக்டீரியாவின் தாக்கம் தடுக்கப்படுகின்றன.
சாதாரணமாக தயாரிக்கப்படும் கருவாட்டின் சராசரியான சேமிப்பு காலத்தை விட மேம்படுத்தப்பட்ட முறையின் மூலம் தயாரிக்கப்படும் கருவாட்டின் சேமிப்பு காலம் அதிகமாக உள்ளது. அதிக லாபமும் கிடைக்கும்.
பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் கால்சியம் புரோப்பியோனேட் மூலம் கருவாட்டின் நிறம், மணம் மற்றும் சுவை மேம்படுத்தப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட முறையில் கருவாடு தயாரிப்பதற்கு ஏற்படும் செலவு சற்று அதிகமாக இருந்தாலும், தயாரிக்கப்படும் முறை, அதன் பயன்பாடு மற்றும் லாபம் முதலியவற்றை கருத்தில் கொண்டு அனைவரும் இம்முறையைப் பின்பற்றி மீன்கருவாடு தயாரித்து, விற்பனை செய்து பயன்பெறலாம்.
மீனில் நிறைய சத்துக்கள் இருந்தாலும், நல்ல மீனை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால்தான் அனைத்து சத்துக்களும் நமக்கு முழுமையாக கிடைக்கும். கெட்ட மீனில் மீனை கெட செய்யும் பாக்டீரியாக்கள் அதிகமிருக்கும். கெட்ட மீனில் மனிதனுக்கு நோயுண்டாக்கும் பாக்டீரியாக்கள் காணப்படும். அவை மனிதனுக்கு வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுபோக்கு போன்றவற்றை உண்டாக்கும்.
நல்ல மீன்களை கண்டறிவது எப்படி?
மீனின் தரத்தை அதன் வெளித்தோற்றத்தை கொண்டு நாம் அறியலாம். நல்ல மீனின் தோல் பளபளப்பாகவும், கடல்பாசி மணத்துடன், கண்கள் பிரகாசமாகவும், செதில் உறுதியாக தோலில் இணைக்கப்பட்டும், திடமான பதத்துடனும் இருக்கும். அதனை விவரமாக பார்ப்போம்!
நல்லமீன்கள்: மென்மையான, கடல்பாசி, நீர்பாசி மணம் கொண்டிருக்கும்.
கெட்டமீன்கள்: கெட்ட அழுகிய அமோனியா நாற்றம் வீசும்.
நல்லமீன்கள்: பிரகாசமான தோற்றம், நிறம், தலையை சுற்றி ரத்த புள்ளிகள் இல்லாமல் இருப்பது.
கெட்டமீன்கள்: பிரகாசமற்ற தோற்றம், மங்கிய நிறம்.
நல்லமீன்கள்: பிரகாசமான ஒளி ஊடுருவும் குவிந்த கண்களை கொண்டிருக்கும்.
கெட்டமீன்கள்: பிரகாசமற்ற குழிவான கண்களை கொண்டிருக்கும்.
நல்லமீன்கள்: ஈரப்பதத்துடன் சிவப்பான செவுள் அமைந்திருக்கும்.
கெட்டமீன்கள்: காய்ந்த வெளிறிய நிறத்துடைய செவுள் இருக்கும்.
நல்லமீன்கள்: ஆசன வாய் இறுகலாக மூடியிருக்கும்.
கெட்டமீன்கள்: ஆசன வாய் துருத்திக்கொண்டு திறந்திருக்கும்.
நல்லமீன்கள்: இறுகிய மற்றும் உறுதியான பதத்துடன் காணப்படும்.
கெட்டமீன்கள்: மென்மையான உடல், மெதுவாக அழுத்தினால் விரல் பதியும்தன்மையுடன் இருக்கும்.
நல்லமீன்கள்: வயிறு இறுக்கமாக இருக்கும்.
கெட்டமீன்கள்: வயிறு உருமாறி, வீக்கமாக காணப்படும்.
நுகர்வோர் கவனிக்க வேண்டியவை:
மீனின் தரத்தை கண்டறிந்த பின் வாங்கவும்.
மண்ணில் புரட்டிய சிறு மீன்களில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும்.
பனிக்கட்டியில் சேமித்த மீன்களை தாராளமாக வாங்கலாம். பனிக்கட்டியிட்ட மீன்களின் தரம், பனிக்கட்டியிடாத மீனின் தரத்தைவிட சிறந்ததாக இருக்கும்.
மீனை வாங்கி சென்ற சிறிது நேரத்திற்குள் சமைக்கவும் அல்லது நன்கு கழுவி செவுள், குடல் நீக்கி குளிர்பதன பெட்டியின் உறைபதன அறையில் சேமிக்கவும்.
தரமான இறால் புதிதாகவும், தசை மற்றும் மேலோடு உறுதியாகவும், புதிய மணத்துடனும் இருக்கும். கெட்ட இறால், வெளி ஓடு தளர்வாகவும், நிறம் மாறியும், அமோனியா வாடையுடனும் காணப்படும்.
(தொடரும்)
கட்டுரை: பேராசிரியர்கள் குழு,
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்.
Related Tags :
Next Story