காணாமல்போன நிலா-சுபா


காணாமல்போன நிலா-சுபா
x
தினத்தந்தி 26 Aug 2018 9:17 AM GMT (Updated: 26 Aug 2018 9:17 AM GMT)

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருணும், பூர்ணிமாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

முன்கதை சுருக்கம்:

னியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருணும், பூர்ணிமாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவரும் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வீட்டுமனையை பரிசாகபெற்று, அங்கு புது வீடு கட்டி குடியேறினார்கள். வீட்டின் ஒரு பகுதியில் அருணுடன் போட்டியில் பங்கேற்ற முத்ராவும், மற்றொரு வீட்டில் சுந்தரம் என்பவரும் வாடகைக்கு வசிக்கிறார்கள். கர்ப்பிணியாக இருக்கும் பூர்ணிமாவுக்கு உதவியாக தாயம்மா கிராமத்தில் இருந்து வருகிறாள். முத்ராவால் அருண் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் உருவாகிறது. சுந்தரமும் பாதிப்புக்குள்ளாகிறார்.

முத்ராவை வீட்டை காலி செய்ய வைக்க அருண் முயற்சிக்கிறான். இந்த நிலையில் பூர்ணிமாவின் செல்போனுக்கு அவர்களது படுக்கை அறை காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வருகிறது. அந்த வீடியோவின் பின்னணியில் முத்ரா இருப்பது தெரியவருகிறது. வீடியோவை அழிக்க வேண்டுமானால் மேலே உள்ள அபார்ட்மெண்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு மிரட்டுகிறாள். நடந்த சம்பவம் குறித்து போலீசில் அருண் புகார் கொடுக்கிறான். ஆனால் முத்ராவோ, அருண்தான் வீடியோ எடுத்ததாக கூறுகிறாள். அவனால் முத்ரா மீது கொடுத்துள்ள புகாரை நிரூபிக்க முடியவில்லை. இதற்கிடையே சுந்தரம் வீட்டை காலி செய்துவிடுவதாக கூறுகிறார். அவரிடம் வாங்கியிருந்த முன் பணத்தை எப்படி கொடுப்பது என்று தெரியாமல் அருண் தடுமாறுகிறான். முத்ராவும் அவனை அலுவலகத்தில் சந்தித்து போலீசில் கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு எச்சரிக்கிறாள். அவளுடன் பழகிய ரோஷன் என்பவன் மூலம் அருண்தான் வீடியோ எடுக்க சொன்னதாக குழப்பம் விளைவிக்கிறாள். விரக்தியுடன் வீடு திரும்பும் அருணை போலீஸ் கைது செய்ய காத்திருக்கிறது.

அருண் அதிர்ந்து கிரைம் இன்ஸ்பெக்டரைப் பார்த்தான். “என்னை எதுக்கு சார் கைது பண்ணணும்?”

“முத்ராவை நீங்க கொலைசெய்ய முயற்சி பண்ணீங்கனு உங்க மேல புகார் குடுத்திருக்காங்க.. அவங்க ஆதாரமாக் குடுத்திருக்கற கத்தியில உங்க கைரேகை இருக்கு..” என்றார், அவர்.

“என் கைரேகையை எப்ப சார் ஒப்பிட்டுப் பார்த்தீங்க..?”

அவர் சிரித்தார். “படிச்சவங்களாச்சே, யோசிப்பீங்கனு நெனைச்சேன்.. உங்க ஆதார் நம்பர் எங்களுக்குத் தெரியும். உங்க ஒவ்வொரு விரல் ரேகையும் போலீஸ் கேட்டா கிடைக்கும்..”

“அருண், நீ முத்ராவை எப்ப..?” என்று ஆரம்பித்த பூர்ணிமா, அருண் முகம் மாறியதும் வாக்கியத்தைப் பாதியில் நிறுத்தினாள்.

“கொலை முயற்சிலாம் இல்ல.. ஒரு நாள் கோபத்துல கத்தியைத் தூக்கினேன். அப்புறம், அவ வீட்டுலயே தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன்.. கைரேகை கலையாம, அதை பத்திரமா எடுத்து வெச்சிருந்து போலீஸ்ல அவ குடுப்பானு நான் நெனைக்கல பூர்ணா..”

“அது, உங்க வாதம், அருண். ஆனா, வீட்டை காலி பண்ணச் சொல்லி முத்ராவுக்கு தினப்படி அழுத்தம் குடுக்கறீங்க.. இப்ப சைபர் கிரைம்ல வேற உங்களுக்கு ஏதோ சிக்கலாமே.. அதையும் மனசுல வெச்சுக்கிட்டு, கத்தியைத் தூக்கிட்டீங்கனு முத்ராவோட புகார்.. எதுவா இருந்தாலும், உங்களைக் கைது செய்து விசாரணைக்குக் கூட்டிட்டுப்போக எனக்கு உரிமை இருக்கு. அநாவசியமா கலாட்டா பண்ணாம ஜீப்ல ஏறுங்க..”

“சார், நீங்க கேட்ட பணத்தை கொண்டுவந்து தரலன்னு உங்களுக்கு என் மேல கோபம்..” என்று அருண் சொன்னதும் அவர் முகம் கடுமையானது.

“உங்களைக் கட்டாயப்படுத்தி ஜீப்ல ஏத்தறதை ஊர் பூரா வேடிக்கை பார்க்கணுமா, நீங்களா வரீங்களா..?”

அருண் திடீரென்று விறைப்பானான். “பூர்ணா, பயப்படாத..! நியாயம் நம்ம பக்கம் இருக்கு..” என்று பைக்கை உள்ளே கொண்டுபோய் நிறுத்தினான்.

“அருண், அவசரப்படாத..! சுந்தரம் குடும்பமும் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க.. தாயம்மாவும் ஆஸ்பத்திரியில இருக்காங்க. இப்ப, வீட்ல நான் தனியா இருந்து முத்ராவை சமாளிக்கணும்.. அதைப் பத்தி யோசிச்சியா..?”

“நீ இங்க இருக்காதே.. கிளம்பி, தத்தி மோகன் வீட்டுக்குப் போயிடு..!” என்று சொல்லிவிட்டு, ஜீப்பில் ஏறினான் அருண்.

பூர்ணிமா, ஜீப் செல்வதையே வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

***

காவல் நிலையம்.

“யோவ், லாக்கப்பை திறந்துவிடுய்யா..” என்றார், இன்ஸ்பெக்டர்.

“சார், என் வக்கீல்கிட்ட பேசணும்..”

“இங்க பாருங்க, அருண்.. இந்த நேரத்துல பெயில்ல எடுக்க முடியாது. நாளைக்கு கோர்ட்டுக்கு விடுமுறை வேற.. வக்கீலாலயும் ஒண்ணும் பண்ண முடியாது. போய் உள்ள உக்காருங்க..”

“சார், நீங்க என்னைப் பழிவாங்கறீங்கன்னு நினைக்கறேன்..”

அருண், காவல் நிலையத்தின் தற்காலிக சிறைக்கூடத்துக்குள் அடைக்கப்பட்டான்.

“சார், ரவுடிங்கல்லாம் வெளில சுத்திட்டு இருக்காங்க.. உங்களைப் போல ஆளுங்கல்லாம் லாக்கப்புக்கு வந்துசேரறீங்க.. கொஞ்சம் பார்த்து நடந்துக்கக் கூடாது..?” என்று கருணையுடன் சொல்லியபடி, அந்த வயதான கான்ஸ்டபிள் லாக்கப் கதவைப் பூட்டிவிட்டு, நகர்ந்துபோனார்.

அதே காவலறையின் மூலையில் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்த ஓர் இளைஞன் நிமிர்ந்தான்.

“வாங்க சார்.. பார்த்தா கண்ணியமா இருக்கீங்க..? லஞ்சம் குடுக்காம மாட்டிக்கிட்டீங்களா..?”

அவனைப் பார்த்தால், நன்றாகப் படித்தவன்போல் இருந்தான்.

அருண் எதிர் சுவரில் சாய்ந்து அமர்ந்தான். “அது ஒரு பெரிய கதை..” என்றான்.

“என் பேர் நித்யன். நீங்க..?”

“அருண்..”

சிறையறைக்குள் மங்கலான வெளிச்சம். சுவர் மூலைகளில் சுத்தப்படுத்தப்படாத ஏதேதோ கறைகள். அடைக்கப்பட்ட காற்றின் இறுக்கமான நாற்றம். கொசுக்கள் ரீங்காரமிட்டன. வெளியில் அவ்வப்போது காவல்துறையிடம் அடி வாங்கும் சிலரது ஓலம்.

“நான் லவ் பண்ணேன். அதுக்காக ஜெயிலுக்கு வந்திருக்கேன்..”

“ஓ..! ஜாதிவிட்டு ஜாதி காதலா..?”

“இல்ல சார்.. இது வேற கதை. நான் ஒரு பொறியியல் பட்டதாரி.. ஒரு கம்பெனியில நல்ல வேலையிலதான் இருக்கேன்.. என் காதலி ஒரு கல்லூரில லெக்சரர். அதே கல்லூரில அவளோட துறைத்தலை வருக்கு அவ மேல ஒரு கண்ணு. அடிக்கடி கண்ட மெசேஜ் அனுப்பி, அவளைத் தொந்தரவு பண்ணிட்டே இருந்தாரு. நேர்ல போய் எச்சரிச்சேன். அவர் மாறல..”

“கல்யாணம் ஆகாதவரா..?”

“அம்பத்தஞ்சு வயசு. முழு வழுக்கை. வீட்ல பொண்டாட்டி, தடி தடியா மூணு பசங்க வேற இருக்காங்க. இருபத்தஞ்சு வயசு பொண்ணு மேல என்ன லவ்வு?”

“இது லவ்வுகூட இல்ல..”

“எப்பப் பாரு, ‘அட்ஜஸ்ட் பண்ணிக்க, அட்ஜஸ்ட் பண்ணிக்க’ன்னு துரத்திருக்கான்.. ஒரு நாளைக்கு எல்லாரும் கிளம்பிப் போனப்புறம், ‘தேர்வுத் தாளையெல்லாம் திருத்தணும். உதவி செஞ்சிட்டு போ..’ன்னு என் லவரை இருக்கச் சொல்லிட்டான். ‘எனக்கு ஒத்துழைச்சாதான் நீ தொடர்ந்து இங்க இருக்க முடியும்..’ன்னு தனிமைல, அவகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியிருக்கான்.. அவ ரகசியமா எனக்கு மெசேஜ் அனுப்பினா.. புறப்பட்டுப் போனேன்.. ஆத்திரத்துல மூக்குலயே குத்துவிட்டேன். மல்லாந்து விழுந்துட்டான்.. கொஞ்சம் எக்குத்தப்பா பட்டு, மூக்கெலும்பு உடைஞ்சி, ரத்தம் நிக்கவேயில்ல.. ரத்தம் கொஞ்சம் மூச்சுக்குழாய்ல போயிடுச்சு போல இருக்கு.. மூச்சடைச்சு, பெரிய பிரச்சினையாகி, ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிட்டாங்க. ஐசியூ-ல கிடக்கான். போலீஸ் என்னைக் கைது பண்ணி, இழுத்திட்டு வந்துருச்சு. இந்த ஆம்பளைங்களுக்கு ஏன் சார் புத்தி வரல..?”

அருண் சிரித்தான்.

“ஒரு பக்கம் மட்டுமே பார்த்து, ஆம்பளைங்களைக் கேவலமாப் பேசறோம். நான் இங்க வந்திருக்கறதுக்குக் காரணம் ஒரு பொண்ணு.. அழகான, ஆபத்தான, கிரிமினல் மூளை இருக்கற பொண்ணு..” என்று அருண் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

***

பூர்ணிமா, கடவுள் படங்களுக்கு எதிரில் அமர்ந்து, விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள். தன் அம்மாவுக்கு போன் செய்து, விவரங்களைச் சொல்லலாம் என்று ஒரு பக்கம் தோன்றினாலும், எங்கோ உட்கார்ந்திருக்கும் அவர்கள் மிகவும் பயந்துவிடுவார்கள் என்ற தயக்கமும் வந்தது. மோகன் வீட்டுக்குப் போய் அடைக்கலம் கேட்க, சுயமரியாதை இடம் கொடுக்கவில்லை.

திடீரென்று அவளுடைய போன் ஒலித்தது. எடுத்தாள்.

“ஆஸ்பத்திரிலேர்ந்து பேசறோம், மேடம். தாயம்மாவை இன்னிக்கி டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டுப் போறதா சொல்லியிருந்தீங்க.. நீங்க கட்டின பணம் சரியாப் போச்சு.. இதுக்கு மேல அவங்க இங்க இருந்தாங்கன்னா, கூடுதலா பணம் கட்டவேண்டி வரும்..”

“நீங்க டிஸ்சார்ஜ் பண்ண ரெடி பண்ணி வைங்க.. நான் வரேன்..” என்றாள் பூர்ணிமா.

தனக்குத் துணையாக தாயம்மாவை அனுப்பிவைக்க கடவுளே முடிவு செய்துவிட்டாற்போல் அவளுக்குத் தோன்றியது.

***

“டேய், சும்மா பேசிட்டே இருக்கக்கூடாது. சைலன்ட்டா இருங்க..” என்று கான்ஸ்டபிள், சிறையறைக் கம்பிகளில் தடியால் தட்டி எச்சரித்தார்.

“நம்பவே முடியல..!” என்றான் நித்யன், குரலை இறக்கி. “யார் சார் அந்த முத்ரா? எனக்கே பார்க்கணும்னு ஆசையா இருக்கு..”

“பார்த்தா, உங்க காதலியை மறந்துட்டு அவ பக்கம் சாய்ஞ்சாலும் சாய்ஞ்சுருவீங்க..” என்று அருண் விரக்தியுடன் சிரித்தான்.

***

முத்ரா, பால்கனியில் நின்று தலையைக் கோதிக்கொண்டிருந்தபோது, வாசலில் ஆட்டோ வந்து நின்றது.

ஆட்டோவிலிருந்து பூர்ணிமா முதலில் இறங்கினாள். பின்னாலேயே தாயம்மாவைக் கைத்தாங்கலாக இறக்கினாள். முத்ரா பரபரப்பாக படிகளில் இறங்கிவந்து அவர்களை எதிர்கொண்டாள். அவள் இடது கையில் ஒரு மருத்துவக் கட்டு.

“தாயம்மா, எப்படி இருக்கீங்க..? நல்லா இருக்கீங்களா..?”

“ஏய்.. இதுக்கெல்லாம் நீ அனுபவிக்காமப் போக மாட்டே..!”

“ஏ கெழவீ..! அன்பாப் பேசினா சாபம் குடுக்கறே..! போ.. போ.. ஊருக்குப் போய் ஓய்வெடு..!” என்றாள் முத்ரா, இகழ்ச்சியாகப் புன்னகைத்து.

பூர்ணிமாவின் பக்கம் திரும்பி, கட்டு போட்ட கையை உயர்த்திக் காட்டினாள். “உன் புருஷன் கத்தியால குத்திட்டுப் போயிட்டான். அத்தனை ரத்தமும் வெளில போயிருந்தா, செத்துப் போயிருப்பேன்..! ரெண்டு மூணு நாள் லாக்கப்புல இருந்துட்டு வந்தாதான் அவனுக்கும் புத்தி வரும்; உனக்கும் புத்தி வரும்..”

“தாயம்மா, நீங்க உள்ள போங்க.. முத்ரா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றாள், பூர்ணிமா.

- தொடரும்

Next Story